உத்தரபிரதேச  மாநிலம், குஷி நகர், தியோரியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, 
திறமையான, நேர்மையான அரசுக்கு ஓட்டளிக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், இப்போது எதிர்க்கட்சிகள் மல்லாக்க கவிழ்ந்து விட்டன என தெரிவித்தார்.

இப்போது, என் ஜாதி சான்றிதழை, இவர்கள் கேட்க துவங்கியுள்ளனர். நான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவன் தான். ஆனால், இந்தியாவை, இந்த உலகத்திலேயே முன்னோடி நாடாகமாற்றுவதே, என் கனவு.ஜாதிய தலைவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான்.
நான் ஏழை ஜாதி. ஏழ்மை தான், என் ஒரே அடையாளம். ஏழ்மையைசந்தித்தவன்; அதன் வலியை உணர்ந்தவன்.

மக்களின் ஆசியால், நாட்டுக்கு சேவையாற்றும் வாய்ப்பையும் பெற்றவன்.இப்போது என்னிடம் ஜாதி சான்றிதழ் கேட்பவர்கள், அதிகாரத்தில் இருந்த போது, செல்வத்தையும், சொத்துக்களையும் குவித்தவர்கள் என குற்றம்சாட்டினார்.

பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், நம் வீரர்கள், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா... எப்படியெல்லாம் எதிர்க்கட்சியினர் நாடகமாடுகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்த தினத்தில் இருந்தே, பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர். நாட்டை துாய்மைப்படுத்தும் பணியில், இதுவும் ஒன்று தான். பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை துாய்மைப்படுத்துகிறோம் என மோடி ஆவேசமாகப் பேசினார்.