‘அவ்வளவு பயங்கரமான புயலிலும் தலைவர் மோடி படம் கிழியாம கம்பிரமா நிக்குது பாருங்க’ என்று புளகாங்கிதம் அடைந்த பா.ஜ.க.வினருக்கு எதிராக நெட்டிசன்கள் சிறப்பான சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

அதிதீவிர புயலான ஃபோனியின் கோர தாண்டவத்தால் ஒடிசாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் அதிதீவிர புயலாக உருவாகி நேற்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கரையைக் கடந்தது. காலை 8 மணிக்குப் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் 11 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது.

காற்றின் வேகத்தால் கிராமப் பகுதிகளில் குடிசை வீடுகளின் கூரைகள் பறந்துள்ளன. பல இடங்களில் செல்போன் கோபுரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டு ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கூரை பறக்கும் வீடியோ வெளியாகி புயலின் தாக்கத்தை உணர்த்துகிறது. அதுபோன்று புயல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றில் மோடியின் பேன்னர் மட்டும் கிழியாமல் இருந்ததை வலைதளங்களில் எடுத்துப்போட்டு பி.ஜே.பி.யினர் புல்லரிப்பு அடைந்து வந்தனர். ஒவ்வொரு ஆக்‌ஷனுக்கும் ஒரு ரியாக்‌ஷன் இருக்குமல்லவா? தற்போது அதே படத்தை மீண்டும் வைரல் செய்யும் ஆண்ட்டி இண்டியன்ஸ். ‘மோடி மட்டும் தான கிழியலை. பக்கத்துல இருந்த அவரோட வாக்குறுதிகளை புயல் அடிச்சிட்டுப்போயிடுச்சே’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள்.