பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க ராணுவ ஹெலிக்காப்டர் மூலம் கன்னியாகுமரியில் வந்திறங்கினார். 


பிரதமர் மோடி வருகையை அடுத்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாகப்பட்டிணத்தில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் கேரளத்தில் இருக்கும் திருவனந்தபுரம் வந்திறங்கினார் மோடி. பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரியை வந்தடைந்தார். கன்னியாகுமரியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு இடையே தேஜஸ் ரயில் சேவையை துவங்கி வைக்க உள்ளார். மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளில் அமைந்திருக்கும் மேம்பாலங்களையும் திறந்து வைக்க இருக்கிறார்.

அடுத்து பணகுடி – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை, மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை ஆகியவற்றை நாட்டுக்கு அர்பணிக்க இருக்கிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டு இன்னும் ஓரிரு மணி நேரங்களில் இந்திய எல்லையை வந்தடைய இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனுக்கு இந்திய எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதேவேளை தமிழக எல்லையான கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.