modi and panneerselvam issue
தர்மயுத்தம் எனும் பெயரில் அ.தி.மு.க.வுக்குள் உள் கழகத்தை நடத்திக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தார். இதன் மூலம் துணை முதல்வர் பதவி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளைப் பெற்றார்.
தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ், பன்னீருக்கு துணைமுதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது பழனிசாமி மற்றும் பன்னீர் இருவரின் கைகளையும் பிடித்து தான் நடுவில் நின்று இணைத்து வைத்தார். இது தேசிய அளவில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. பி.ஜே.பி.யை ஆகாத அத்தனை கட்சிகளும் ‘ஒரு கவர்னர் செய்யும் காரியமா இது?’ என்று ஆதங்கப்பட்டனர்.
மு.க.ஸ்டாலினோ ஒரு படி மேலே போய் “பிரதமரின் உத்தரவுப்படிதான் அ.தி.மு.க.வில் எல்லாமே நடக்கிறது. பழனிசாமி மற்றும் பன்னீருக்கு இடையில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார் மோடி.” என்று தர லோக்கலான வார்த்தையில் வறுத்தெடுத்தார்.
இதற்கு பி.ஜே.பி.யின் ஹெச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜாவோ ‘ஸ்டாலின் வார்த்தையை கவனித்து பேச வேண்டும். இந்த தேசத்தின் பிரதமரை பார்த்து சொல்லும் வார்த்தையா இது?!’ என்று குதித்தார்.
இந்நிலையில் இத்தனை மாதங்கள் கழித்து, அந்த பன்னீர்செல்வமே ‘பிரதமர் மோடி எங்களுக்கு பஞ்சாயத்துதான் பண்ணி வைத்தார்.’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதன் மூலம் எகத்தாளமாக சிரிக்கிறார் ஸ்டாலின்.
இதுபற்றி பேசும் விமர்சகர்கள் “ தேனி மாவட்டத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டத்தில் பேசிய பன்னீர் ‘ பிரதமர் கூறியதால்தான் நான் பழனிசாமி அணியுடன் இணைந்தேன். எனக்கு கட்சி பதவி போதும், அமைச்சர் பதவி வேண்டாம்! என்றுதான் சொன்னேன். ஆனால் பிரதமர் என்னை அமைச்சராக கூறினார். அதனால்தான் நான் அமைச்சரானேன்!’ அப்படின்னு சொல்லியிருக்கிறார். இதன் மூலமா அன்னைக்கு ஸ்டாலின் பிரதமரை பார்த்து சொன்ன ‘கட்டப்பஞ்சாயத்துக்காரர்’ அப்படிங்கிற விமர்சனம் முழுமையாக உண்மையாகியிருக்குது. அதையும் சம்பந்தப்பட்ட பன்னீர்செல்வத்தின் வாயாலேயே ஊர்ஜிதமாகியிருக்குது.
அன்னைக்கு ஸ்டாலினை மறுத்தும், எதிர்த்தும் பேசிய தமிழக பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்கள் இன்னைக்கு என்ன பதில் சொல்ல போறாங்க?” என்று கேட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ‘தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.’ என்று சொன்னதன் மூலம் துணைமுதல்வர் பன்னீருடன் வாத மோதலுக்கு வழி வகுத்திருக்கும் பொன்னார் உள்ளிட்டோர், மோடியை இப்படி சிக்கலில் இழுத்து விட்டிருப்பதால் பன்னீர்செல்வத்தை கடும் விமர்சனங்களால் துளைத்தெடுக்க தயாராகிவிட்டார்கள் என உறுதியான தகவல்.
