வரும் மார்ச் அல்லது ஏப்ரல்  மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரியணை ஏறியது. ஆனால் தற்போது அப்படி இல்லை. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தது. இதையடுத்து உஷாரான பாஜக தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாருடன் கூட்டணி அமைத்து அறிவித்தது. இதே போல் தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான  பேச்சுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், தென்னிந்தியாவில் கால் பதிக்கும் வகையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, பாஜகவின்  அடித்தளத்தை விரிவுபடுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது என தெரிவித்தார். அதன் அடிப்படையில் கமல், ரஜினியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தணாராக உள்ளதாக தெரிவித்தார்..

2014-ம் ஆண்டில் இருந்தே நிறைய கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களில் சில கட்சிகள் சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி சேருமா என்றால், அதுபற்றி இங்கு விவாதிக்க முடியாது என பிரதமர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையிலான மோதலாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்கள் அரசு செய்த பணிகளை எண்ணிப்பார்த்து பாஜக  மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களின் அறிவுக்கூர்மை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மோடி அலை ஓய்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன்மூலம், மோடி அலை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.