mobile medical camps to treat people

சென்னையில் கூடுதலாக 200 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, இந்த சிறப்பு நடமாடும் மழைக்கால மருத்துவ முகாமை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பருவமழை தீவிரமடைந்துவருவதால், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழையால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மக்களிடத்திலே சென்று வழங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 401 சிறப்பு மருத்துவ முகாம்கள் செயல்பட்டுவரும் நிலையில், மக்களின் நலனுக்காக கூடுதலாக 200 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நடமாடும் மருத்துவ முகாம் வாகனத்திலும் மருத்துவர், செவிலியர், மருத்துவ உபகரணங்கள் இருக்கும். மழையால் மக்களுக்கு தொற்றுநோய்களோ காய்ச்சலோ ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் இந்த சிறப்பு மருத்துவ குழுக்கள் சிகிச்சை அளிக்க உள்ளது.

இந்த நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஒரு வாரத்திற்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இந்த வாகனங்களில் இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

200 நடமாடும் மருத்துவ முகாமை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது, ஒருவாரம் நடைபெற உள்ள மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.