கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் தமிழகத்தில் அமலில் உள்ளது. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொது போக்குவரத்து இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே, பொது முடக்கத்தை மேலும் நீட்டிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் ஆகஸ்ட் 31-க்குப் பிறகு பொது முடக்கத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் குமாரவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், “கொரோனாவை பற்றி மருத்துவ உலகமே குழம்பித் தவித்த காலம் தாண்டி, இப்போது மக்களே விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி வைப்பது பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, வேலைக்கு செல்ல இயலாத அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அபாயக் கட்டத்திற்கு செல்லவே வழிவகுக்கும். எனவே ஆகஸ்ட் 31-க்கு பின் ஊரடங்கு தேவைதானா என்று அரசு பரிசீலிக்க வேண்டும். மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். அதற்கு இ-பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
ஊரடங்கு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-க்குப் பிறகு என்ன நடவடிக்கை என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.