பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். இது தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற செய்வதற்கான முயற்சி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 “கட்சியை துரித உணவகம் போல கமல் நடத்துகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்துள்ளார். அவர்களும் என்னைபோல ஓர் உணவகத்தைதான் நடத்திகொண்டிருக்கிறார்கள். எனவே, போட்டி, பொறாமையின் காரணமாக இதை அவர் சொல்லி இருக்கலாம். நான் ஆட்சியாளர்களை வியாபாரிகளாகவே பார்க்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தேவையா? இது கலாசார சீரழிவு என்றும் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். இந்த ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது. இதுதான் நான் அவருக்கு அளிக்கும் பதில்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடமாக கொண்டுவந்திருப்பது தேவையற்றது. மாணவர்கள் படிப்பை முடித்ததும் தங்களுக்கு தேவையான பிற விஷயங்களை அவர்களே தேர்வு செய்வர். அதை கல்விக் கூடத்தில் கொண்டுவரத் தேவையில்லை.

 
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். இது தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற செய்வதற்கான முயற்சி என்று சொல்கிறார்கள், அது அப்படி இருக்கலாம். அதில் தவறில்லையே, நாகலாந்து சென்றால் அந்த ஊர் தொப்பியை அணிந்துகொண்டு ஆடுவதில்லையா? அதுபோல நமது பெருமையையும் தூக்கி சிறிது நாட்கள் தலையில் வைத்துக்கொள்ளட்டும்” என்று கமல் தெரிவித்தார்.