கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றது. 
 
​சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3-வது இடம் பெற்றது. அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாகி வருகிறார். கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுடன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ​இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிர்வாகிகள் கூறும்போது, ‘பிரசாந்த் கிஷோரை தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் அணுகின. இருந்தாலும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் கொள்கைகள், அரசியலுக்கு வந்ததன் நோக்கம், கடந்த ஒரு ஆண்டு செயல்பாடு ஆகியவை பிரசாந்த் கிஷோரை கவர்ந்ததே இதற்கு காரணம்.

எங்களுடன் கைகோர்த்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சியும் கூட. ஆளுங்கட்சியே பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யத் தயாராக இருந்த நிலையில் அவர் எங்கள் கட்சிக்கு பணியாற்ற ஒப்புக்கொண்டது எங்கள் கட்சிக்கு பெருமை தான். பிரசாந்த் கிஷோர் இதுவரை பணிபுரிந்தவை எல்லாமே மக்களிடம் ஏற்கனவே செல்வாக்கு கொண்ட பழைய கட்சிகள். முதல் இடம், 2-வது இடத்தில் இருந்த கட்சிகள். ஆனால் மக்கள் நீதி மய்யம் ஒரு வயது குழந்தை. எங்களால் நடக்க முடியும் என்பதை கடந்த தேர்தலில் நிரூபித்துள்ளோம்.

அடுத்து பந்தயத்தில் ஓட வைத்து வெற்றி பெற வைக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ளார். அவரை பொறுத்தவரை இது அவருக்கே ஒரு புதிய சவால் தான். இதை அவரே ஆர்வத்துடன் கூறினார். கட்சியின் தற்போதைய நிலை, வளர்ச்சிப் பாதையில் செல்ல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக, அவ்வப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இன்று கட்சியின் செயற்குழு ஆலோசனை கூட்டமும் அதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். செயற்குழு கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்கிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதற்காக நேற்று முதலே பிரசாந்த் கிஷோர் கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் உள்பட அனைத்து தலைமை நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பிரசாந்த் கிஷோர் கூறியதுபடி கட்சியின் கட்டமைப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் போகிறோம். ஒரு பொது செயலாளர் புதிதாக  சேர்க்கப்படுகிறார். அடுத்து செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு செயற்குழு பலமாக்கப்படும். மாவட்ட அளவிலான கட்சி அமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும். கடைக்கோடி கிராமம், கடைசி வாக்குச்சாவடி வரை கட்சி சென்று சேர்வதற்காக புதிய பொறுப்புகள் உருவாக்கப்படும்.

மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் அகில இந்திய அளவில் ஒரு முன்மாதிரியான கட்சியாக மாற இருக்கிறது. விரைவாகவும் எளிதாகவும்
கிராமப்புறங்களை கட்சி அடைவதற்காக சில நுட்பங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கி இருக்கிறார். அவை இனி ஒவ்வொன்றாக  செயல்படுத்தப்படும். அதேபோல் தேர்தல் வருவதற்கு குறுகிய காலமே இருப்பதால் இந்த காலநேரத்துக்குள் எப்படி கட்சியை மக்களிடம் கொண்டு செல்வது என்று தீவிரம் காட்ட உள்ளோம். இதற்காக சில அதிரடி நடவடிக்கைகள் இருக்கும். சட்டமன்ற தேர்தல் மட்டும் தான் எங்கள் இலக்கு. அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம்’ என அவர்கள் கூறினர்.