கமல் கோட்சே பற்றி தெரிவித்த ஸ்டேட்மெண்ட் நாடு முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நாலாபுறமும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஆனாலும் கமல்ஹாசன் தனது ஸ்டேட்மெண்டில் இருந்து பின் வாங்கவில்லை. பயங்கர எதிர்ப்புகள் கிளம்பியும் கமல் அசராமல் மீண்டும் மீண்டும் இந்துவம் பற்றியே விமர்சித்து வருகிறார். சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறாரா? மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் கூறுவதென்ன?

 

’’இவர்கள் சர்ச்சை ஆக்குகிற கருத்தை, தலைவர் கமல் பேசுவது இது முதல் முறை அல்ல. அதை பல தடவை பேசியிருக்கிறார். மக்களவை தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாகவும் இதைப் பேசினார். வழக்கமாக, பிரசாரத்துக்காகப் போகிற இடங்களில் உள்ளூர் பிரச்சனைகளை அவர் பேசுகிறார். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவை குறித்தும் வலியுறுத்திப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

அரவக்குறிச்சி பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி எறிந்து விட்டு, ஒரு வார்த்தையை மட்டும் வைத்து சர்ச்சை ஆக்குகிறார்கள். வி‌ஷயத்தை வேண்டுமென்றே திசை திருப்பி, அபத்தமான அர்த்தம் கற்பிக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த எங்கள் தலைவர், இதற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். கமல் பின்வாங்கும் மனிதர் கிடையாது. அவர் பேசியது தமிழ்நாட்டில் விவாதிக்க கூடிய ஒரு வி‌ஷயம் தான். கோட்சேவை திட்டிவிட்டாரே என்ற கோபத்தை நேரடியாக காட்ட முடியாமல் இந்துக்களை சொல்லிவிட்டார் என்று இந்து பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

எங்கள் கட்சியில் மதம் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. பொதுச்செயலாளர் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி கும்பிடுபவர் தான். கமல் தன்னுடைய கடவுள் மறுப்பு கொள்கையை எங்களிடம் கூட திணித்தது இல்லை. கமல் மாற்றத்துக்கான தலைவராக உருவாகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். கமல் கேட்கும் மற்ற கேள்விகளான குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கேள்விகள் அவர்களை உறுத்துவதால் இதை பெரிதாக்குகிறார்கள். கமல், கோட்சே பற்றி பேசிய இடத்தில் தான் ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்சனை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்சனைகளை பற்றியும் பேசினார். ஆனால், அவைகளை பற்றி யாரும் பேசவில்லை.

கமல் மீது வன்முறையை ஏவ தூண்டுபவர்கள் அந்தந்த கட்சியில் கண் துடைப்புக்காக கண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு வருவார்கள். பி டீம் என்பது எங்களால் பாதிக்கப்படும் இன்னொரு அணியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் எல்லோருக்குமே எதிரானவர்கள் தான் நாங்கள். அது இந்த சர்ச்சை மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

இதுவரை வேறு எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத துணிச்சலும், நேர்மையும் எங்கள் தலைவரிடம் இருக்கிறது. எனவே எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தலும், கமலை முதல்வர் பதவியில் அமர வைப்பதும்தான். விரைவில் தமிழக ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். கமல் எப்போதும் இதே மாதிரி தான் இருப்பார். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பூசி மெழுகவோ கண்ணை மூடி சிலரை ஆதரிக்கவோ செய்ய மாட்டார்’’ என்கின்றனர்.