ஆளுநர் கிரண்பேடி உரையுடன் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. ஆனால் பாஜக நியமன எம்.எல்.ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க புதுச்சேரி சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே எப்போதும் ஏகாப்பொருத்தம் தான். 

ஒருவருடைய செயலை மற்றொருவர் குறை சொல்வதே வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் எதிர்ப்பையும் மீறி சாபாநாயகர் இருக்கும்போதே ஆளுநர் கிரண்பேடி பாஜகவை சேர்ந்த மூன்று பேருக்கு எம்.எல்.ஏ பதவி நியமனம் செய்து வைத்தார். 

ஆனால் அது செல்லாது என ஆளுந்தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. அப்போது சட்டப்பேரவையில் பங்கேற்க நியமன பாஜக எம்.எல்.ஏக்கள் வந்தபோது உங்களுக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை என கூறி அவர்களை வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் தள்ளுமுள்ளுலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில்,  அவர்கள் மூன்று பேரும் சட்டப்பேரவை வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவர் மயக்கமடைந்தார். 

இதைதொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.