ரங்கசாமியை வீழ்த்த பாஜகவே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் நிலையை பாஜகவே செய்து வருகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் படலம் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரசார் அவரவர் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி எல்லை அம்மன் கோயில் வீதியில் வசிக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பைக், சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊதுவத்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். இதேபோல அடுப்பில் பானையை வைத்து நெருப்பு மூட்டி காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஐந்து மாநில தேர்தலுக்காக 127 நாட்கள் பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தாமல் இருந்தார்கள்.

அரசு கஜானா திவால்
ஆனால், கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை சதமடித்திருக்கிறது. காஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களை 5 லட்ச ரூபாய்க்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ரூ. 36 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இந்த வருவாய் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. மத்திய அரசு கஜானாவை காலி செய்து திவாலாக்கி வருகிறது.
மவுனத்தில் ரங்கசாமி

இப்படித்தான் இலங்கை, பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதுபோலவே இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி நிலை உருவாகும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் ரங்கசாமிக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ரங்கசாமி மவுனமாக இருக்கிறார். ரங்கசாமியை வீழ்த்த பாஜகவே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் நிலையை பாஜகவே செய்து வருகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் படலம் தொடங்கியுள்ளது.
நம்பிக்கை இழப்பு

சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில் உள் துறை அமைச்சரும், 4 எம்எல்ஏக்களும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வெளி நாட்டில் எவ்வளவு முதலீடுகளை கொண்டு வந்தார்கள் என்பதையெல்லாம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.அரசியலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் முக்கியம் அல்ல. மக்கள் மத்தியில் மோடி அரசு நம்பிக்கையை இழந்து வருகிறது” என்று நாராயணசாமி தெரிவித்தார்.
