MLA TTV Dinakaran Pressmeet

ஆடிட்டர் குருமூர்த்திக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன் கூடா நட்பு கேடா முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று மதியம் சுமார் 1.45 மணிக்கு தலைமை செயலகம் சென்றார். அங்கு அவருக்கு சபாநாயகர் தனபால் சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

தினகரன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் தினகரன். 

துரோக ஆட்சியை, செயல்படாத ஆட்சியை, முதுகெலும்பில்லாத ஆட்சியை, கைக்கூலிகளின் ஆட்சியை ஒரு முடிவுக் கொண்டுவர அனைவரும் எதிர்பார்த்த தேர்தல் ஆர்.கே.நகர தொகுதி இடைத்தேர்தல் என்றார். அதிமுக மக்கள் விரோத ஆட்சியாளர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

யாருக்கோ நீங்கள் கைக்கட்டி வாய்ப்பொத்தி கட்டுப்படுவதால்தான் ஆர்.கே.நகர் மக்கள் உங்களைத் தோற்கடித்து விட்டனர். குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவர். அதிமுகவுக்கும் குருமூர்த்திக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார். 'அந்த' 5, 6 பேரின் கூடா நட்பு கேடா முடிந்துள்ளது.

உங்களின் துரோகங்களுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. ஆர்.கே.நகர் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டி இருக்கிறார்கள் என்றார். ஏணியில் ஏற்றிவிட்டவர்களையே கீழே தள்ளிவிட்டீர்கள். தயவு செய்து திருந்துங்கள். இல்லை என்றால் மக்கள் திருத்தி விடுவார்கள் என்றார் தினகரன்.