MLA Taimunan Ansari questioned in the Assembly
தூத்துக்குடி போராட்டத்தின்போது, துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்றும், சீருடை அணியாத போலீசார், போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டது ஏன்? என்றும் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை
முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் கடும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் வாயில் கதவில் தமிழக அரசின் அரசாணையும் ஒட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆலையின் விரிவாக்கத்துக்கு தரப்பட்ட நில ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி வன்முறை குறித்த விவர அறிக்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தூத்துக்குடி மக்கள் யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமல் அமைதி திருமப் ஒத்துழைக்க வேண்டும்.
முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு என்கிற வார்த்தை இடம் பெறவே இல்லை. மாறாக, காவல் துறையின் நடவடிக்கை என்றே
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கையோ, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையோ
குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில், முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார். அப்போது, தூத்துக்குடி
போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார். சீருடை அணியாத போலீசார், போராட்டக்காரர்களை
துப்பாக்கியால் சுட்டது ஏன்? என்றும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் பேனரை போர்த்திக் கொண்டு உள்ளே வந்தார்.
