‘மோடி வாழ்க என்று சொன்னாலோ அவரது கட்சிக்கு ஓட்டுக் கேட்டு வந்தாலோ அவர்கள் கன்னத்தில் ஒரு பளார் விடுவதோடு நில்லாமல் அவர்களது பல்லைத் தட்டிக் கையில் கொடுங்கள்’ என்று அன்பாகப் பேசியிருக்கிறார் ஒரு எம்.எல்.ஏ.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ  சிவலிங்கா கவுடா, ஹசன் நகர் அருகே இருக்கும் அரசிக்ரே பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசுகையில், " 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவேன். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று மோடி உறுதியளித்திருந்தார். இந்த  5 ஆண்டுகளில் அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. உங்களிடம் வாக்கு கேட்டு வரும் பாஜகவினரிடம் எப்போது ரூ.15 லட்சத்தை கொடுப்பீர்கள் என்று கேளுங்கள்.

இந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவாக யாரேனும் பிரச்சாரம் செய்து உங்களிடம் வாக்குகேட்டு வந்தால், அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறையுங்கள், மோடி வாழ்க என்று யாரேனும் கோஷமிட்டால், அவர்களை வாயையும், பல்லையும் உடையுங்கள் " எனத் தெரிவித்தார்.

சிவலிங்க கவுடாவின் இந்தப் பேச்சு தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘கவுடா வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பா.ஜ.க.வினர் கொந்தளித்து வருகிறார்கள்.