பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெட்டிப்புடுவேன்.. குத்திப்புடுவேன் என மிரட்டல் விடுத்து வருவதாக சாத்தூர் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் பகிரங்கப் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருகிற 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என 1000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்;- நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருந்தது இல்லை. அவர்களாகத்தான் பதவியில் இருக்கச் சொன்னார்கள்.

இப்பொழுது கட்சி நிர்வாகிகள் முன்பே என்னை தரக்குறைவாக பேசுவதும் என்னை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஒரு அமைச்சரே 6 மாதமாக கொலை மிரட்டல் விடுத்து பேசி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை அதிமுக  எம்எல்ஏ முன்வைத்துள்ளார். கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் மறந்து விட்டு அதிமுக என்ற கட்சியின் வெற்றிக்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய ராஜவர்மன், நான் இருக்கும் இடத்திற்கு விஸ்வாசமாக இருப்பேன் என்னை இந்த சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முதல்வரும் துணை முதல்வரும் மக்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனாக வைத்து இருக்கிறார்கள். இந்த வேலைக்காரனை பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் என்னை தூக்கி எறியுங்கள். நான் என்றுமே பொதுமக்களின் காலுக்கு செருப்பாக இருப்பேன் என்று பேசினார்.