கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்த சௌந்தர்யாவை ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மீதான விசாரணை நாளை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து  2 தினங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார். தியாகதுருகத்தில் உள்ள அவரது வீட்டில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது.

ஆனால், இந்த திருமணத்திற்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவர், ‘’13 வருஷமா பிரபுவை தெரியும். என் வீட்டுக்கும் வருவார். என் பொண்ணுக்கு இப்போதான் 19 வயசு ஆகுது. பிரபுக்கு 39 வயசாகுது. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார். அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? நான் சாதி பார்க்கிறவன் இல்லை.. மதம் பார்க்கிறவன் இல்லை. காதலுக்கும் நான் எதிரி கிடையாது... ஆனால், 20 வயசு அதிகமான நபருக்கு எப்படி என் பொண்ணை தர்றது?

4 மாசம்தான் காதல் பண்றேன்னு சொல்றாரே.. இது கொரோனா காலம். எல்லாரும் 6, 7, மாசமா லாக்டவுனில் இருக்கிறோம்.. காலேஜும் பிப்ரவரியில் இருந்தே லீவு விட்டுட்டாங்க.. இவர் எங்க போயி என் பொண்ணை பார்த்து லவ் பண்ணினார்? 3 வருஷமா காதலிச்சோம்..ன்னு.. அவர் சொல்ற கணக்குபடியே பார்த்தாலும், அப்போ என் பொண்ணுக்கு 16 வயசுதான். 16 வயசு பொண்ணை மயக்கி காதல் வலையில் விழ வைக்கிறது தப்பு இல்லையா? என் பொண்ணை சின்ன வயசில இருந்து தூக்கி வளர்த்தவர். இதான் ஜீரணிக்க முடியல" கூறிருந்தார்.

அதேபோல, மணமக்கள் பிரபுவும் சவுந்தர்யாவும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு தங்கள் தரப்பு விளக்கத்தை சொல்லி இருந்தனர். கடத்தி கொண்டு போய் கல்யாணம் செய்யவில்லை, என்றும் முழு சம்மதத்துடன் நடந்த திருமணம் இது என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, சென்னை ஐகோர்ட்டில், சாமிநாதன் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகள் சவுந்தர்யாவை எம்.எல்.ஏ பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகவும், இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், தனது மகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பிலும் தங்கள் கருத்துக்களை சொல்வார்கள் எனறும், தம்பதி தரப்பில் தங்களது விளக்கம் தந்த வீடியோக்களையும் ஆதாரங்களையும் தாக்கல் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரவு தன் மகளை ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மீதான விசாரணை நாளை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.