ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களின் விவரங்களை அந்த நிறுவனங்கள் காவல்துறைக்கு தர மறுத்தால், அவை எதுவுமே தமிழகத்திற்கு தேவையில்லை என அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்கள் ஆரோக்கியமான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தவறான காரியங்களுக்கும் பிரச்னைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுகின்றன. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெடித்த புரட்சியில் இளைஞர்களும் மாணவர்களும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாகவே ஒருங்கிணைக்கப்பட்டனர். அதேபோல சமூக நலன் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளும் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. 

அதேநேரத்தில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக வதந்திகளும் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. நிறைய தகவல்கள் பரவுவதால், வலைதளவாசிகளுக்கு எது சரியான தகவல், எது தவறான தகவல் என்பது தெரியாமலே பல நேரத்தில் அதை பகிரும் நிலை உள்ளது. 

மேலும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோரின் பெயர்களில் தவறான கணக்குகளும் உள்ளன. நல்ல செயல்களுக்கு சற்றும் குறையாமல், தவறான காரியங்களுக்கும் தவறான தகவல்களை பரப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அது பல குற்ற செயல்களுக்கும் காரணமாக அமைகிறது. 

இந்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமான தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ பரமசிவம், ஃபேஸ்புக் வாயிலாக தவறான தகவல்களை பரப்புவோர் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் காவல்துறைக்கு தர மறுத்தால் ஃபேஸ்புக்கை தமிழ்நாட்டிலிருந்தே துரத்த வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.