செய்யாறு- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தின் சுற்றுப்புற சுவற்றில் ஜெ. தீபா பேரவையின் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்தது.

இன்று காலை பார்த்தபோது அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தது. இதை அதிமுக எம்எல்ஏ தூசி கே. மோகனின் ஆதரவாளர்கள் கிழித்ததாக கூறப்பகிறது.

இதையறிந்த தீபாவின் ஆதரவாளர்கள், மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து தீபா ஆதரவாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பும் கடுமையாக தாக்கி கொண்டனர்.

பின்னர், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி தீபா ஆதரவாளர்கள் எம்எல்ஏ அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.