திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் நீக்கப்பட்டாலும் அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஆகையால், கு.க.செல்வம் சட்டப்பேரவையில் பாஜக குரலாக  ஒலிக்க உள்ளார்.

திமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த கு.க. செல்வம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும்போது, தான் பாஜகவில் இணையவில்லை என்றும் தொகுதி பிரச்சனைக்காகவே நட்டாவை சந்திக்க வந்ததாகவும் கூறினார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் கறுப்பர் கூட்டம் குறித்தும் பேச வேண்டும். திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பின்னர், முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, திமுக தலைமை கு.க. செல்வம் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கியதோடு அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த கு.க.செல்வம், திமுகவினர் மாற்றுக் கட்சியினரை சந்திக்கக் கூடாது என்று கட்சியின் எந்த சட்ட விதிகளிலும் சொல்லப்படவில்லை என்று கடிதம் எழுதினார்.

இந்த காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்று கூறி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்படாவிட்டாலும் கு.க. செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கு.க. செல்வம் பாஜக குரலாக ஒலிக்க உள்ளார். 

கு.க. செல்வம் இப்படி கூறியதற்கு காரணம் என்னவென்றால் திமுகவில் எம்எல்ஏவாக இருக்கும் கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தால் அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும். ஒரு கட்சியில் எம்எல்ஏவாக இருக்கும் போதே அவர் வேறு கட்சி மாறினால், அவர் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்காக பாஜகவில் இணையாமல் கு.க. செல்வம் காத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.