கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முக்குலத்தோ புலிப் படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் கோட்சே’ என்று தெரிவித்தார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையானதால் எதிர்ப்பு எழுந்தது. பாஜக தலைவர்கள் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர். கமல் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது.
கமலின் இந்தப் பேச்சு பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “இந்துகளை தவறாகப் பேசிய கமல் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று அவர் தன் பங்குக்கு பேசினார். ‘ நாக்கை அறுக்க வேண்டும்’ என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்தது. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முக்குலத்தோ புலிப் படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். “அவரவர் கருத்து சொல்ல இங்கே உரிமை உண்டு. கமல் அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதற்காக அவருடைய நாகை அறுக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.