நடிகர் கருணாசிடம் இருந்து எம்.எல்.ஏ பதவியை பறிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு தொடங்கியுள்ளது. ஆர்பாட்டத்தின் போது கருணாஸ் பேசியதை முதலில் எடப்பாடி பழனிசாமி சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து கவுண்டர் சமுதாய தலைவர்கள், வன்னியர் சமுதாய தலைவர்கள் மற்றும் நாடார் சமுதாய தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தடுத்து பலரும் இதே போல் பேச ஆரம்பித்துவிடுவர் என்று அவர்கள் எச்சரித்தனர். 

இதனால் கருணாசை கைது செய்ய வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக கருணாசை எடப்பாடி அரசு கைது செய்தது. ஆனால் அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிய ஆரம்பித்தன. சமூக வலைதளங்கள் துவங்கி தனிப்பட்ட முறையிலும் பல்வேறு சமுதாய தலைவர்கள் எடப்பாடியை நேரடியாகவே தொடர்பு கொண்டு கருணாஸ் கைது குறித்து பேசி பாராட்டு தெரிவித்துள்ளனர். சில வாரஇதழ்கள், நாளிதழ்களும் கூட எடப்பாடி அரசின் நடவடிக்கையை புகழ்ந்து கட்டுரைகளை வெளியிட்டன. 

இந்த நிலையில் கருணாஸ் குறித்து வேறு ஒரு தகவலும் எடப்பாடிக்கு வந்தது. அதாவது எடப்பாடி ஆட்சி அமைந்த புதிதில் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் ஒரு செட்டில்மென்ட் செய்யப்பட்டது. பின்னர் மாதம் மாதம் எம்.எல்.ஏக்களுக்கு தேவையை அறிந்து அவர்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அந்த வகையில் கருணாசுக்கும் கூட கொடுக்க வேண்டியதை எடப்பாடி தரப்பு கொடுத்தே வந்துள்ளது. கருணாஸ் தினகரனுடன் இருக்கிறார் என்று தெரிந்ததும் கொடுக்கல் வாங்கல் நின்று போனது. இந்த நிலையில் தான் கருணாஸ் தி.மு.க தரப்பிலும் கை நீட்டிய தகவல் தற்போது எடப்பாடிக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்து எடப்பாடி மட்டும் அல்லாமல் மூத்த அமைச்சர்களும் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

அப்போது தான் கருணாஸ் மீது வேறு என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட வல்லுநர்களிடம் எடப்பாடி ஒரு யோசனை கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்கனவே இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பேசிய சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்ட தகவல் எடப்பாடியிடம் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன் என்கிற பதவிப் பிரமாண உறுதிமொழியை கருணாஸ் மீறியதும் விவாதப் பொருள் ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியதாக கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை பறிக்கலாம் என சட்ட வல்லுநர்கள் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலை தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியுள்ளார். ஜாதி துவேசத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்க நினைத்த கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை ஏன் பறிக்கவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தங்களை கேட்பதாக ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் கருணாசிடம் இருந்து எம்.எல்.ஏ பதவியை பறிக்கும் சூழல் தற்போது நிலவுவதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

கருணாசை கைது செய்த போதே பெரிய அளவில் எதிர்ப்புகள் வரவில்லை. எனவே உடனடியாக கருணாஸ் எம்.எல்.ஏ பதவியையும் பறித்துவிடலாம் என்கிற முடிவுக்கு தமிழக அரசு வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இதற்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அனுமதி கொடுத்தால் போதும் என்று கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.