நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னரே தனது ஆதரவு திமுகவுக்கா, அதிமுகவுக்கா அல்லது அமமுகவுக்கா என்பதை தெரிவிப்பேன் என எம்.எல்.ஏ.வும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களை அவதூறாகப் பேசி இணையத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. அவதூறாக பேசி இணையத்தில் வெளியிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர் கருணாஸ் தென்மண்டல காவல்துறை தலைவரிடம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவை அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பெண்களை அவதூறாக பேசும் வாட்ஸ் ஆஃப் வீடியோவால் பொன்னமராவதியில் இருபிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டதாகவும், மேலும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது அதிர்ச்சியடைய வைக்கிறது. தேவர் திருமகனார் பெண்களைக் கடவுளாக நினைத்தவர். ஆனால், சிலர் செய்த தவறுகளால் தேவையற்ற பிரச்னை உருவாகியுள்ளது. பொன்னமராவதி பகுதி மக்கள் அன்போடு வாழும்போது, தங்கள் விளம்பரத்துக்காக இவ்வாறு சிலர் செய்துள்ளனர். தவறு எந்த சமூகத்தினர் செய்தாளும் தண்டிக்கப்பட வேண்டும். தற்போது கீழ்த்தரமான செயல்களை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேலும் பல்வேறு சமூகத்தினர் தமிழ்நாட்டில் இருக்கும்போது சமுதாயத்தைப் பற்றி பேசுவது தண்டிக்கத்தக்கது. எந்த ஒரு வீடியோவையும் உடனே உண்மை என்று நம்பிவிடக்கூடாது. எது உண்மை தன்மையை அறிய வேண்டும் என்றார்.நான் ஏற்கெனவே இருக்கும் அரசியல் நிலைபாட்டில்தான் இருக்கிறேன். தேர்தல் முடிவுக்குப் பின் எனது அறிவிப்புகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.