திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

முன்னதாக தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், கட்சி நிர்வாகி செல்வநாயகம் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கருணாஸ் வேலூர் சிறையிலும், செல்வநாயகம் கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் போது சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கருணாஸின் ஆதரவாளர்கள், ரசிகர்களை தாக்கியதற்காக ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ. கருணாஸுக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து கருணாஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து அவர் அழைத்து வரப்பட்டார். இதனிடையே கருணாஸ் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவும் மற்றும் காவல்துறையினரின் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. முதலில் காவல்துறையினரின் மனு விசாரிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏ கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் போலீசாரின் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.