நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எம்.எல்.ஏ.வின் உதவியாளருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று கருணாஸுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.இதுவரை கொரோனா தொற்றினால் 4 அமைச்சர்கள் உட்பட 24 எம்எல்ஏக்கள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.