முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் ஐபிஎல் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் தற்போது கருணாஸ் சிறையில் உள்ளார். 

முன்னதாக தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனைதொடர்ந்து கடந்த 23-ம் தேதி சாலிகிராமம் வீட்டில் கருணாசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரெட் கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கருணாசை வரும் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கருணாசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் இருதரப்பு வாதங்களும் நேற்று நிறைவடைந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் தற்போது கருணாஸ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.