மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆகாஷ் விஜய்வர்கியா. இவர், பி.ஜே.பி மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன். நல்ல துடிப்புள்ள இளம் அரசியல்வாதியான இவர் லஞ்சத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் போபால் பகுதியில் இருக்கும் ஒரு கட்டடத்தை  அதன் உரிமையாளர்  ஏழை, எளிய பொது மக்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கட்டடம் இருந்த இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ கட்ட முடிவு செய்தார்.
 
இதையடுத்து அங்கு குடியிருந்தவர்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். ஆனால் அங்கிருந்த மக்கள் தங்களுக்கு காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதற்கு ஒப்புக் கொள்ளாத கட்டட உரிமையாளர் போபால் மாநகராட்சியில் பணிபுரியும் ஒரு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை காலி செய்ய வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த மாநகராட்சி அதிகாரி பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு வந்துத கட்டடத்தை இடிக்க முயற்சி செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ  ஆகாஷ் விஜய்வர்கியா உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றார். அந்த மாநராட்சி அதிகாரி லஞ்சம் வாங்கினார்  என்பதை உறுதி செய்து கொண்ட எம்எல்ஏ, தான் கொண்டு வந்திருந்த கிரிக்கெட் மட்டையால் அந்த மாநகராட்சி அதிகாரியை வெளுத்து வாங்கினார்.

அதுவும் பொதுமக்கள் முன்னிலையிலேயே ஆகாஷ அதிகாரியை அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ், என்னால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது அதனால் தான் அடித்தேன் என்றும், இனிமேல்  எந்த அதிகாரியாவது லஞ்சம் வாங்கினால் தொடர்ந்து அடிப்பேன் என்றும்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது  ஊடகத்தினரும் அங்கே இருந்ததால் அடிதடிக் காட்சிகள், தற்போது சமூகவலைதளத்தில் செம வைரல் ஆகி வருகிறது..

சம்பவம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் பேசியிருக்கிறார், ஆகாஷ். ‘அந்த அதிகாரி கட்டடத்தின் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். அதை என்னால் பொறுக்கமுடியவில்லை. அதனால்தான், கிரிக்கெட் மட்டையை எடுத்து அடி வெளுத்துவிட்டேன்’ என்று தெரிவித்தார்.

ஆனால், ஆகாஷூக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ஒரு அதிகாரியை நடுரோட்டில் வைத்து இப்படி அடிப்பதற்கு யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது?’ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள், மனித உரிமை ஆர்வலர்கள். இதுதொடர்பாக ஆகாஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.