பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை அரசு கைது செய்ய தயங்குவது ஏன் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திரிபுராவில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. 

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நேற்று இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரியார் சிலை உடைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் பெரியார் சிலை உடைப்பு குறித்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாடிலன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பெரியார் குறித்த கருத்துக்காக எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். எச்.ராஜாவை கைது செய்திருந்தால் பெரியார் சிலை உடைத்திருக்க மாட்டார்கள் என்றார். எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யாததால்தான் பெரியார் சிலை உடைப்புக்கு தைரியம் வந்துள்ளதாக கூறினார். இழிவான செயலைத் தூண்டி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரததில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.