Asianet News TamilAsianet News Tamil

எந்தளவுக்கு வாழ்த்துகள் குவிகிறதோ, அதைபோல் பொறுப்புகளும் பணிகளும் நிறைந்திருக்கின்றன – மு.க.ஸ்டாலின் கடிதம்

mkstalin letter
Author
First Published Jan 9, 2017, 1:21 PM IST


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு எழுதி கடிதம்.

திமுகவின் செயல்தலைவராக பொறுப்பேற்ற நாள்முதல் தினந்தோறும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவற்றின் முன்னணி நிர்வாகிகளும் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்துகள் தெரிவித்தது, தனிப்பட்ட எனக்குரிய வாழ்த்தாக மட்டுமல்லாமல், தமிழர்களின் பண்பாட்டுக்கு, சிறப்பு சேர்க்கும் பெருமையாகவே கருதுகிறேன்.

அருகிவரும் பண்பாட்டை மீட்டெடுத்து நாளும் பெருகிவரும் வகையில் வெளிப்பட்ட இத்தகைய அன்பான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் மாச்சரியங்களைக் கடந்த நட்பும் நல்லுறவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பதில் மற்றவர்களுடன் இணைந்தும், தமிழகத்தின் பொதுநலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒருங்கிணைந்தும் செயலாற்றுவதற்கு இத்தகைய வாழ்த்துகள் வலிமையாகத் துணை நிற்கும் என்றும் நம்புகிறேன்.

அதுபோலவே அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஊடகத்துறையினர், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என நாட்டு நலனில் அக்கறை கொண்ட பலரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி, அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டி மேலும் வளர்ந்தோங்கும் வண்ணம் செயல்பட உறுதியேற்கிறேன்.

எந்தளவுக்கு வாழ்த்துகள் குவிகின்றனவோ, அந்தளவுக்கு பொறுப்புகளும் பணிகளும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்கிறேன். எந்த நம்பிக்கையுடன் அனைவரும் வாழ்த்துகிறார்களோ அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் சீரிய தருணமாக இது அமைந்துள்ளது.

கட்சி தொண்டர்களின் சங்கிலி தொடர் போன்ற வருகையும் வாழ்த்தொலியும் நெஞ்சத்தில் தேனாகப் பாய்கிறது. நாம் காண்கிற களங்களுக்கும் அதில் நாளை பெற போகிற வெற்றிகளுக்கும் இன்று கிடைக்கும் ஊக்கமிகு வாழ்த்தொலியாகவே உங்களின் அன்பைக் கருதுகிறேன்.

போர்க்களம் செல்லும் வீரர்களுக்கு அவர்களின் இல்லத்தாரும் ஊர்மக்களும் மாலையிட்டு, வெற்றித் திலகமிட்டு, பறைகொட்டி வாழ்த்து சொன்ன வரலாற்றை புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தலைவர் கருணாநிதி எழுதிய ‘சங்கத் தமிழ்’ நூலில் இவற்றை அழகு மிகு சொற்களால் கவிதையாக வடித்திருக்கிறார்.

பண்டைத்தமிழர் பாரம்பரியத்தை ஒட்டி ஊக்கம் தரும் வாழ்த்துகளை வழங்கும் உடன்பிறப்புகள் ஆர்வம் மிகுதியால், என் காலில் விழுவதைத் தவிர்த்து, கட்சியின் சுயமரியாதை கொள்கையை காப்பாற்ற வேண்டும் என நான் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கும் எனது வேண்டுகோளை ஏற்று, கட்சி கட்டுப்பாட்டைக் காப்பாற்றியமைக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர்கின்ற இன்றைய நிலையில், சென்ற முறை ஏமாந்து போன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கான பணிகளை நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நமது செயல்பாடுகள் தொடர வேண்டும்.

எதையும் ஜனநாயகப்பூர்வமாக செயல்படுத்தக் கூடிய திமுக, மக்களின் எதிர்பார்ப்புகளையும் விரைந்து நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படும். களத்தில் விளையவிருக்கும் செயல்பாடுகளுக்கு உரமாகின்றன உங்களின் வாழ்த்துகள். இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து இயக்கப் பணிகளைத் தொடர்கிறேன்

Follow Us:
Download App:
  • android
  • ios