Asianet News TamilAsianet News Tamil

விரைவில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கப் போகிறாராம் எந்த நம்பிக்கையில் சொல்கிறார் ஆ.ராசா?

m.k.stalin becoming Chief Minister soon aa.rasa
m.k.stalin becoming Chief Minister soon aa.rasa
Author
First Published Jan 26, 2018, 10:10 AM IST


மதுரை

சட்டம் படித்தவனாக கூறுகிறேன், நல்ல தீர்ப்பு வரப் போகிறது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்கப் போகிறார் என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார்.

மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஆனையூரில் நேற்று நடைப்பெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தார். சேடப்பட்டி முத்தையா முன்னிலை வகித்தார்.

இதில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "2ஜி வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, மூர்த்தி எம்.எல்.ஏ. என்னை அடிக்கடி சந்தித்து வழக்கு நிலவரம் குறித்து கேட்பார். அவரிடம், இந்த வழக்கில் இருந்து நான் விடுதலை ஆகி விடுவேன் என்று உறுதியாக கூறினேன்.

அப்போது அவர், “விடுதலை ஆனதும், நீங்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் மதுரையாக இருக்க வேண்டும்“ என்றார். நான் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தேன்.

அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து என்னை பேசுவதற்கு அழைத்து இருந்தாலும் மூர்த்திக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மதுரைக்கு வந்திருக்கிறேன். ஆனால் பொதுக்கூட்டம் என்று நினைத்து தான் இங்கு வந்தேன். ஆனால் மூர்த்தி, மாநாடு போல் இந்த வீரவணக்க நாள் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தகுதியுள்ள ஒரே இயக்கம் தி.மு.க. தான். நமது மொழிக்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்திட வேண்டும். அவர்களது தியாகத்தை மறந்து விடக்கூடாது. அப்படி மறந்து விட்டால், நமது மொழியை காக்க முடியாமல் போய்விடும்.

நான் படிக்கும்போது புகைப்படம் எடுப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ஆனால், இன்று செல்போனில் படம் எடுத்து, அடுத்த விநாடியே இலண்டன், நியூயார்க் போன்ற உலகின் எந்த பகுதிகளுக்கும் அனுப்ப முடியும். இந்தியாவில் செல்போன் வளர்ச்சிக்கு காரணம் கருணாநிதிதான் என்பதனை நாம் யாரும் மறந்து விடக் கூடாது.

2ஜி வழக்கின் போது, நான் எனது மனைவி பெயரில் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டில் சொத்து வாங்கி இருப்பதாகவும், அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவதாகவும் சிலர் தவறான தகவல்களை பரப்பினர்.

அப்போது நீதிமன்றத்தில், “உங்களை சிறையில் அடைக்கப் போகிறோம். ஏதாவது சொல்வது என்றால் சொல்லுங்கள்“ என்று நீதிபதி கூறினார். அதற்கு நான், “வருமானத்திற்கு மீறி நான் ஒரு ரூபாய் சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.யோ, அமலாக்கத் துறையோ, வருமானவரித் துறையோ கண்டுபிடித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பேன்“ என்று கூறினேன். என் மீது கூறப்பட்ட ஒரு குற்றச்சாட்டை கூட அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

மாநிலத்தில் உள்ள ஆட்சி செயல்படாத ஆட்சியாக இருக்கிறது. எல்லோரும் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று கூறுகின்றனர். ஆனால், சட்டம் படித்தவனாக நான் கூறுகிறேன், நல்ல தீர்ப்பு வரப் போகிறது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்கப் போகிறார்" என்று அவர் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios