வேலூர் தேர்தலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றியை எப்படியாவது அபகரிக்கமுடியுமா என ஆலோசனை நடத்துகிறார்கள், திமுகவின் வெற்றியை அவர்களின் சூழ்ச்சிகளால் தள்ளிப் போட்டிருக்கலாமே தவிர, எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுத்தியுள்ள கடிதத்தில் திமுகவின் வெற்றியை சூழ்ச்சிகளால் தள்ளிப் போட்டிருக்கலாமே தவிர, எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது என்று கூறியுள்ளார்.

டெல்லிக்குச் சென்று, என்ன செய்யப்போகிறார்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் என்று எதுவுமே செய்ய இயலாதவர்கள் நம்மை நோக்கி கேள்வி கேட்டார்கள். இதுவும் செய்வோம், இன்னமும் செய்வோம். இனம்-மொழி நலன் காக்க, எதுவும் செய்வோம். அதற்காக எமது உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈவோம் என்பதை, தங்களின் ஒவ்வொரு நாள் உயிரோட்டமான நடவடிக்கையிலும் மாற்றார் முகாமும் மலைத்திடும் வகையில், சாதித்துக் காட்டி வருகிறார்கள் நமது மக்களவை உறுப்பினர்கள் என குறிப்பிட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் முழுக்க முழுக்கத் தமிழகத்திற்குப் பயன் தரும் வெற்றியைத் திமுக பெற்றிருக்கிறது. அதுபோல, மாநிலங்களவைத் தேர்தலிலும் நம்முடைய எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். மக்கள் நம்மீது வைத்த மாபெரும் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கழகத்தின் மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்களின் சீர்மிகு செயல்பாடு ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. பதவியேற்பின்போதே நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க.. பெரியார் வாழ்க.. திராவிடம் வாழ்க.. அம்பேத்கர் வாழ்க....தலைவர் கலைஞர் வாழ்க.. என முழங்கியவர்கள் நம்மவர்கள். என்ன செய்ய முடியும் எனக் கேட்டவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற திமுக மற்றும் தோழமைக் கட்சி மக்களவை உறுப்பினர்கள் மக்கள் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறார்கள். 

திட்டமிட்டு சதி செய்து-வீணாகப் பழி போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் நாள் நடைபெறவிருக்கிறது. பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்த மக்கள் விரோத மத்திய-மாநில ஆட்சியாளர்கள் அதே கூட்டணியுடன் வேலூர் தேர்தலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றியை எப்படியாவது அபகரிக்கமுடியுமா என ஆலோசனை நடத்துகிறார்கள்.

திமுகவின் வெற்றியை அவர்களின் சூழ்ச்சிகளால் தள்ளிப் போட்டிருக்கலாமே தவிர, எந்நாளும் தட்டிப் பறித்திட முடியாது. வேலூர் கோட்டை எப்போதும் கழகத்தின் வெற்றிக் கோட்டை, இப்போதும் அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்பதை நிரூபித்திடும் வகையில், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் களப்பணி ஒப்பிட்டுக் காட்ட முடியாத உயர்பணியாக அமைந்திட வேண்டும். திமுகவின் சார்பில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒலிக்கின்ற ஒவ்வொரு குரலும் நம் உரிமைக்கான போர்க் குரலாகும். அதற்கேற்ப, வெற்றிப் பயணம் தொடரட்டும்! உரிமைப் போர்க்குரல் உயரட்டும் என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.