பதவி சுகத்துக்காக உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து தமிழினத்துக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க. என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

அதிமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ''திமுக.வில் திராவிட கொள்கை என்பது கிடையாது. கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்த அண்ணாவின் புகழை காப்பாற்றும் ஒரே இயக்கம் நமது இயக்கம் தான். புரட்சித்தலைவர் மட்டும் இந்த இயக்கத்தை ஆரம்பிக்காவிட்டால் திராவிட கொள்கையே அழித்து போயிருக்கும்.

திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. ஆனால் இங்கு அப்படி அல்ல. கிளைச் செயலாளராக இருந்தவர் தான் இன்றைக்கு முதலமைச்சர் ஆகியுள்ளார். அதேபோல் இளைஞரணி செயலாளராக இருந்தவர் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இதுபோன்று திமுகவில் பார்க்க முடியுமா? தொண்டர்களை நம்பாமல் 500 கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோரை நம்பி தி.மு.க.வை நடத்துகிறார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பி கட்சியை நடத்துகிறார்கள்.

முல்லைப்பெரியாறு, காவேரி, கச்சத்தீவு போன்ற தமிழக உரிமைகளை எல்லாம் தங்களின் பதவி சுகத்திற்காக திமுகவினர் தாரை வார்த்து தமிழகத்துக்கு, தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தை செய்தனர். ஆனால் புரட்சித்தலைவி அம்மா மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு, காவேரி போன்றவற்றில் தமிழகத்தின் இழந்த உரிமையை மீட்டுக் கொடுத்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார். தற்போது முல்லைப்பெரியாறு, காவேரி போன்றவற்றில் தமிழகத்தின் உரிமையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் காத்து வருகின்றனர்.

பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்தது திமுக என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஊழலின் பிறப்பிடமே திமுக தான். இந்த ஆட்சி இன்று போகும், நாளை போகும் என்று கிளி ஜோசியம் சொன்னார் ஸ்டாலின். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார் நமது முதலமைச்சர். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியரை துணை முதலமைச்சர் இன்றைக்கு முன்மொழிந்துள்ளார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்கும் கழகத்தின் இமாலய வெற்றிக்கு உங்கள் பங்கு மகத்தானதாக இருக்கும் வகையில் இன்று முதல் கழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து களப்பணி ஆற்ற வேண்டும்.'' என அவர் கூறினார்.