இனிமேல் அரசியலுக்கு வரவே மாட்டார் என கருதிய நிலையில், திடீரென மதுரையில் பெரிய கூட்டத்தைக்கூட்டி மாஸ் காட்டிவிட்டார் மு.க.அழகிரி. அத்துடன், ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக வரவே முடியாது என்றும் பேசிவிட்டார்.

மு.க.அழகிரியின் திடீர் பேச்சு குறித்து ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகிறது. அதாவது, மீண்டும் தி.மு.க.வில் சேர்வதற்காகவா அல்லது தனி கட்சி தொடங்குவதற்காகவா என்ற பெரும் சந்தேகம் நிலவி வருகிறது. கட்சி தொடங்கவில்லை என்றால் பாஜகவில் சேர்வார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மு.க.அழகிரி பேசுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஸ்டாலினின் குடும்பம் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால், அழகிரியை அமைதிப்படுத்தும் பொறுப்பை வைகோவிடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நல்ல உறவு இருக்கிறது என்பதால், எப்படியாவது வைகோ காரியம் சாதித்துவிடுவார் என்றே நம்புகிறார்கள். வைகோவிடம் அழகிரி பேச்சுவார்த்தை நடத்திவரும் அதே வேளை, கமல்ஹாசனிடமும் கூட்டணி குறித்து அழகிரி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது. கமல்ஹாசனும் பெரிய கட்சிகளில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அழகிரியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறுகிறார்கள்.