பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவ தீர்மானித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அந்நாட்டு எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார். 


இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்ததால் இறக்குமதியை இலங்கையால் செய்ய முடியவில்லை. இதனால், உள் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்பட எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இலங்கை நெருக்கடியிலிருந்து மீள இந்தியாவும் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவுப் பொருட்கள், மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்படும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதோடு இலங்கைக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இலங்கை மக்களுக்கு உதவும்படி தமிழக மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதல்வரின் இந்த முன்னெடுப்புகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. மனோ கணேசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் பேசுகையில், “தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவ தீர்மாணித்து தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்ற கூற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளார்” என்று புகழ் மாலை சூடியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக மனோ கணேசன் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…