இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கஜா புயல் பேரிடர் 15.11.2018 நள்ளிரவில் நிகழ்ந்தது. மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிதியாக 15,000 கோடி ரூபாய் கேட்டும், கஜா பேரிடர் நிதியாக 46 நாட்கள் கழித்து - அதுவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசு 1,146 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கேட்ட 1500 கோடியைக் கூட பெற முடியாமல்" அதிமுக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.வி உதயகுமார் தோல்வி அடைந்துள்ளார்.

அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத்தவறியதால்" இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதிமுக அரசின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு சம்பத் தோல்வி கண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இதுவரை ஸ்டே பெற முடியாமல்- மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வைக்க முடியாமலும்" பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்திருக்கிறார்.

"புதிய எச்.ஐ.வி தொற்றை தடுப்போம்" என்று கூறிய அதிமுக அரசு இன்றைக்கு அரசு மருத்துமனையிலேயே எச்.ஐ.வி ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கொடுமை அரங்கேறி சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் சி விஜயபாஸ்கர் படு தோல்வி அடைந்திருக்கிறார்.

"கார்ப்பரேசன் ஆபிசா அல்லது கரெப்சன் ஆபிசா" என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு தாண்டவமாடும் ஊழலால் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு வேலுமணி தோல்வியடைந்து நிற்கிறார்.

"விளை நிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி தீர்வு காண முடியாமல்" மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி தோல்வியடைந்து விட்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல் - மத்திய அரசிடம் மாநில உரிமையை பாதுகாத்திட முடியாமல் - குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரைக் கூட நீக்க முடியாமல் - சட்டம் ஒழுங்கை அறவே காப்பாற்ற முடியாமல் - டெண்டர் ஊழல் மட்டும் என் பணி என்ற அளவில் முதலமைச்சர் பொறுப்பிலேயே முற்றிலும் தோல்வியடைந்து விட்டார்.

ஒரு நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்து நிற்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பால் எடுக்கப்பட்ட பதவிப்பிரமாணத்துக்கு முரணான வகையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைச்சரவை. இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் கட்சித் தலைவரை இந்த நாட்டுக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைக் காக்கத் தவறி இருக்கிறார்கள். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நான் அப்போதே சொன்னேன். இன்றைக்கு சட்ட அமைச்சராக இருக்கக்கூடிய சி.வி.சண்முகம் அவர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராம்மோகன் ராவ்/ தற்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாத இவர்கள், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள்? இப்படி எல்லாத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட அமைச்சர்களும், முதலமைச்சரும் அடங்கிய அதிமுக அரசின் ஆளுநர் உரையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. பதிலாக தமிழகத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படி அரசின் எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க அரசு எழுதி தந்திருக்கும் தோல்வி காகிதங்களை வாசித்த ஆளுநரின் உரையை புறக்கணித்தும் சட்டமன்றத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தோம் என ஆளுநரை கலாய்த்துள்ளார்.