திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருவதை தடுக்காமல், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் திமுகவினர் நடத்தும் ஆலைகளை மூட உத்தரவிடுவாரா மு.க.ஸ்டாலின் என்கிற கேள்விகள் நாலாபுறமும் எழுந்துள்ளது. 

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மூன்றாவது ஊரடங்கு உத்தரவின்போது சில தளர்வுகள் மூலம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததால் சில கட்டுப்பாடுகளுடன் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை சென்னையை தவிர பிற இடங்களில் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட கடந்த 7ம் தேதி காலை, மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தை விட்டு வெளியேறி மகன், மனைவியுடன் கருப்பு சட்டை அணிந்து கொடி பிடித்து பதாகைகளை ஏந்தி டாஸ்மாக் திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார். 

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உத்தரவுகளை கடைபிடிக்காமல், சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் மன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் திமுகவினர் நடத்தும் மதுபான கடைகள் மூலம் தான் டாஸ்மாக் கடைகளுக்கு மது விநியோகம் செய்யப்படுகிறது. அந்த ஆலைகளை மூட உத்தரவிடாமல் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக போராடுவது முரணாக இருக்கிறது என விமர்சனம் எழுந்து வருகின்றன.  டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் விற்பனைகளில் மது ஆலைகளுக்கு 60 சதவிகித வருமானம் செல்கிறது. குறிப்பாக அந்த மது ஆலைகள் பெரும்பாலானவை திமுக விஐபிகளால் நடத்தப்பட்டு வருகிறது, என்ரிகா எண்டர்பிரைசஸ், மோகம் பிரீவேரீஸ், ஷிவா டிஸ்டல்லரீஸ், ப்ரீவேர்ஸ், எம்.பி டிஸ்டில்லரீஸ், சதர்ன் அக்ரிஃபுரேனிண்டஸ்ட்ரீஸ், மிடாஸ் கோல்டன் டிஸ்டல்லரீஸ், அக்கார்ட் பிரிவேர்ஸ், எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ், கல்ஸ் டிஸிடல்லரீஸ், கோல்டன் வாட்ஸ், கல்ஸ் பேவரேஜ், ஆகிய மது ஆலைகளில், திமுக எம்.பி, டி.ஆர் பாலு, ஜெகத் ரட்சகன், ஜெயமுருகன் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் ஆலைகளே அதிகம்.

ஆக, அவர்கள் நடத்தும் ஆலைகளை மூட உத்தரவிடாமல் டாஸ்மாக்கை மூடச்சொல்வது முரண்பாடு. திமுகவினர் நடத்தும் ஆலைகளை மூடினால் டாஸ்மாக்குக்கு வழங்கும் விநியோகம் குறையும். அதன் மூலம் சரக்கு விற்பனை குறையும். இதை செய்வாரா மு.க.ஸ்டாலின்? என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இதனை வலியுறுத்தும் விதமாக பிரபல தமிழ் வார இதழான விகடனில் ஒரு கார்ட்டூன் வெளியாகி இருக்கிறது. அதில், மது பாட்டில் மீது ஏறி அமர்ந்து கொண்டு முக. ஸ்டாலின், கருப்பு கொடி பிடித்தபடி, ‘ ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு?’என கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மது பாட்டில் மீது அமர்ந்து இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு, அதனை விட்டுக் கொடுக்காமல், மதுக்கடைகளுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தி வருகிறார் என்பதை உணர்த்தும் வகையில் அந்த கார்ட்டூன் கருத்தை வெளிப்படுத்துகிறது.

 

இந்நிலையில், மது ஆலைகளை மூட முன்வருவாரா மு.க.ஸ்டாலின்..? என்கிற கேள்வி தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.