என்னதான் பொதுவுடமை, ஜனநாயகமெல்லாம் பேசினாலும் கூட கழக தலைமைக்கு என்று சில தனிப்பட்ட விஷயங்கள் கடைப்பிடிக்கப்படுவது தானே எல்லா கட்சிகளிலும் வழக்கம். தி.மு.க. ஒன்றும் அதற்கு விதிவிலக்கில்லையே. 

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதி இருக்கும் காலத்திலேயே ஸ்டாலினுக்கு என்று தனி அறை உண்டு. கருணாநிதியின் அறைக்குள் கூட உரிமையாக நுழைந்துவிடும் சீனியர்கள் இவரது அறைக்குள் நுழைய, அனுமதி கேட்டுவிட்டுதான் நுழைவார்கள். கருணாநிதியின் மறைவுக்குப் பின், ஸ்டாலின் தலைவராகிவிட்ட நிலையில் அவர் மீதான மரியாதையும், அச்சமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், ஸ்டாலினின் அனுமதியோடு மட்டுமே திறக்கப்படும் ஒரு முக்கிய அறையை அவர் இல்லாத நேரத்தில் ஒரு எம்.எல்.ஏ. திறக்கச்சொல்லி புழங்கிட, இப்போது அது பெரும் பஞ்சாயத்தாக வெடித்துள்ளது என்கிறார்கள். விவகாரம் இதுதான்....அறிவாலயத்தில் உள்ள முரசொலி வளாக அறை, முன்பு கருணாநிதி தலைமையிலும், தற்போது ஸ்டாலின் தலைமையிலும் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்காக மட்டுமே திறக்கப்படுவது வழக்கமாம்.  கூட்டணி தோழர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படும். மற்ற நேரங்களில் அது பூட்டியே வைக்கப்பட்டு இருக்கும். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டாலின், இளைஞரணி நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி சென்றுவிட்டார். இந்த சூழ்நிலையில் கட்சியின் தகவல்  தொழில்நுட்ப அணியின் கூட்டத்துக்காக இந்த அறையை திறக்கச் சொன்னாராம் மதுரை எம்.எல்.ஏ. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். நிர்வாக தரப்பில் இருந்து தயக்கம் கலந்த மறுப்பு வந்தபோது ‘நான் சொல்றேன்’ என்று திறக்க வைத்து, அவர் கூட்டம் நடத்தியதாக தகவல்கள் கசிகின்றன. இதை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்ற கழக முக்கிய தலைவர்கள் சிலர், இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க சொல்லி போட்டுக் கொடுத்துள்ளார்களாம். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் சற்று கடினமாகவே பேசி, பஞ்சாயத்து விசாரணையை கொண்டு சென்றுவிட்டார் என்கிறார்கள். 

அந்த அறையில் தியாகராஜன் தலைமையில் கூட்டம் நடக்கும் போட்டோவோடு இந்த விவகாரம் தொடர்பான சலசலப்புகள் வெளியாகி உள்ளன. 
இந்நிலையில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்ற எம்.எல்.ஏ.க்களைப் போல் சாதாரண அரசியல் செய்யாமல், மிக நுணுக்கமாகவும், தகவல்பூர்வமாகவும் எதையும் அணுகி அரசியல் செய்வதால் அவர் மீது ஸ்டாலின், சபரீசன், உதயநிதி போன்றோருக்கு பெரிய மதிப்பும், நட்பும் இருக்கிறது.

 

இதனால் பிற்காலத்தில் அமைச்சர், வாரிய தலைவர் என்று வளர்ந்துவிடுவார் என்று அஞ்சும் முக்கிய புள்ளிகள் இப்படியெல்லாம் அவரைக் கோர்த்துவிடுகிறார்கள். ஸ்டாலினே சும்மா இருந்தாலும் இவர்கள் இப்படி ஊதிவிடுகிறார்கள்! என்று தியாகராஜனுக்கு ஆதரவாக தகவல்கள் தடதடக்கின்றன.