மு.க.ஸ்டாலின் குடும்பம் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், ‘’முதல்வராக எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு சென்றால் அதைப்பற்றி கேள்வி கேட்கமாட்டேன். முதல்வராக  சென்ற முறையில்  அதைப்பற்றி கேள்வி கேட்கிறேன். ஆனால், அவர் அதற்கு பதில் கூறாமல் என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார்.

நான் துணை முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்று உலக வங்கி நிதி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினேன். சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வந்தேன். இந்த ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை பதுக்குவதற்காக அவர் வெளிநாடுகளுக்கு சென்றாரா? என்று கேட்க விரும்புகிறேன். அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

நான் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறுகின்றனர். 8 ஆண்டுகளாக இங்கு அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. மத்தியிலும் உங்களுக்கு இணக்கமான ஆட்சிதான் உள்ளது. நான் எவ்வளவு பணம் பதுக்கி வைத்துள்ளேன் என்பதை ஏன் கண்டுபிடித்து வெளியே சொல்லவில்லை? நீங்கள் அதனை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார். நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் ஊரைவிட்டே ஓடவேண்டும்.

நெடுஞ்சாலை துறை டெண்டர் விடுவதில் முதல்-அமைச்சர் மீது உள்ள ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதியே உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஊழல்கள் உள்ளது’’என அவர் தெரிவித்தார்.