ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கனகராஜ் உள்ளிட்டோர் விபத்து, தற்கொலை என அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த நிலையில் கொடநாடு கொள்ளை மற்றும் அதுசம்பந்தப்பட்ட மரணங்களின் மர்மம் தொடர்பான விவகாரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டியுள்ளார் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். கொடநாட்டில் நடந்த கொலைக்கான பின்னணி தகவல்களை சேகரித்துள்ளதாகவும், இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ஆவணப் படம் ஒன்றையும் டெல்லியில் நேற்று அவர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் எப்படி சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கிறார்களோ அதைப் போல, அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களில் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி சந்தேகக் கணைகள் பாய்ந்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் மீது கொலைப்பழி விழுந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார். தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ தனது புலனாய்வு முயற்சியால் திரட்டி உள்ள தகவல்களை டெல்லியில் வெளியிட்டுள்ளதாகவும், அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சிக்குரியதாக உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும்போதே டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் மரணம் அடைகிறார். கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயன் என்பவரது குடும்பம் சாலை விபத்தில் சிக்குகிறது. அதில் சயன் மட்டுமே உயிரோடு தப்புகிறார். சயனின் மனைவியும் குழந்தையும் இறக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ்குமாரும் இறக்கிறார். இந்தத் தொடர் மரணங்கள் அனைத்தும் ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பணம், சொத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்காகவே நடந்துள்ளன என்று சந்தேகம் எழுகிறது” என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், சயன் அளித்துள்ள வாக்குமூலம் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, “கனகராஜ் தன்னை சென்னைக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோரை சந்திக்க வைத்தாகவும் சயன் சொல்கிறார். கொடநாடு பங்களாவில் இருந்து ஆவணங்களை எடுத்து வர தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேரளாவைச் சேர்ந்த ஆட்களைப் பயன்படுத்தலாம் என்றும் அதற்கு 5 கோடி ரூபாய் பணம் பேசப்பட்டதாகவும் சயன் சொல்லி இருக்கிறார். சயன் இதனை வீடியோ பேட்டியாகவே கொடுத்துள்ளார்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ள ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எடுக்கத் திட்டமிடுவதாக கனகராஜும் சயனும் சொன்னதாக வலையார் மனோஜ் சொல்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“பத்திரிகையாளர் மாத்யூ, சயன், வலையார் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் சொல்ல வேண்டும். இந்த மூவர் பேட்டி குறித்து, அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், முதல்வர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு முரணானது இது என்பதால் தமிழக ஆளுநர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் திமுக இறங்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், “இதனை கிரிமினல் கேபினெட் என்று சொல்லி வந்தேன். ஊழல் முறைகேடுகளை வைத்து அப்படிச் சொன்னேன். இப்போது கொலைகள் கொள்ளைகள் குறித்துத் தகவல்கள் வருகின்றன. இந்தக் குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.