Asianet News TamilAsianet News Tamil

உங்க பிளான் என்னன்னு எங்களுக்கு தெரிஞ்சிப்போச்சு... தமிழிசைக்காக அவசர அவசரமாக அறிக்கைவிட்ட ஸ்டாலின்!!

உனக்கு நான், எனக்கு நீ என்று ஊழல் அதிமுகவும், மதவாத பாஜக.வும் கச்சை கட்டிக் கொண்டு திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி  ஒருபோதும் பலிக்காது என தமிழிசையின் கருத்துக்கு அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

mk stalin statements against BJP and tamilisai
Author
Chennai, First Published May 14, 2019, 6:18 PM IST

உனக்கு நான், எனக்கு நீ என்று ஊழல் அதிமுகவும், மதவாத பாஜக.வும் கச்சை கட்டிக் கொண்டு திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி  ஒருபோதும் பலிக்காது என தமிழிசையின் கருத்துக்கு அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என்று பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை பாஜக. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பாஜகவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த  தமிழிசை இப்படியொரு பொய் பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும் இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல- கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம் தேதியுடன்  மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

mk stalin statements against BJP and tamilisai

இதைப் பொறுக்க முடியாத பாஜக. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு திமுக.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். திமுக.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்கு பாஜகவை மிரட்டி விட்டது. மோடி உள்ளிட்ட மேலிடப் பாஜக. தலைவர்களின் சுயநலனுக்கு தமிழிசை கடைசிக்கட்டமாக பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா  சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திமுக. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் திமுகவிற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய திமுகவின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் தப்புக் கணக்குப் போட்டு தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார்.

mk stalin statements against BJP and tamilisai

குறிப்பாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை தமிழிசை வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அதிமுகவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்! உனக்கு நான், எனக்கு நீ என்று ஊழல் அதிமுகவும், மதவாத பாஜகவும் கச்சை கட்டிக் கொண்டு திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

mk stalin statements against BJP and tamilisai
 
அதிமுக- பாஜக போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து - யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி - யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. அந்த வகையில்தான் இந்த மக்களவைத் தேர்தலையும் திமுக சந்தித்துள்ளது. மத்தியில்  மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதிலும் திமுக. உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவராக பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை மே 23- ஆம் தேதிக்குப் பிறகு மாற்றிக்காட்டுவோம்! முதுகெலும்பில்லாத இந்த அதிமுக அரசைத் தூக்கியெறிவோம்.

தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் நரேந்திர மோடியோ மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால்  நரேந்திர மோடியும், மாநில பாஜக. தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

Follow Us:
Download App:
  • android
  • ios