Asianet News TamilAsianet News Tamil

குட்கா விசாரணைக்கு மூடுவிழாவா? துணைபோகும் அதிகாரிகளை சும்மா விடமாட்டேன்...? ஸ்டாலின் எச்சரிக்கை

MK Stalin statement
MK Stalin statement
Author
First Published Apr 24, 2018, 5:10 PM IST


குட்கா வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் திடீரென விசாரணை அதிகாரிகளை மாற்றி விசாரணைக்கு மூடு விழா நடத்துவதா? என்றும் டிரான்ஸ்பருக்கு துணைபோகும் அதிகாரிகளை சும்மா விட மாட்டேன் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், 40 கோடி ரூபாய் லஞ்சப் பரிமாற்றம் செய்யப்பட்ட குட்கா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த மஞ்சுநாதாவை, எவ்விதக் காரணமுமின்றி ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மாறுதல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பிற்காக காத்திருக்கின்ற நேரத்தில் திடீரென்று அந்த விசாரணை அதிகாரியை மாற்றியுள்ளனர். இது, குறைந்தபட்சமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணையையும் முடக்கி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனையும் தப்பவைக்க மேற்கொள்ளும் அப்பட்டமான முயற்சி என்றே தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சுதந்திரமான விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையை மேற்கொள்ள விஜிலென்ஸ் ஆணையராக வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்டிருந்த ஜெயக்கொடியை கடந்த ஜனவரி 8 அன்று மாற்றியது அதிமுக அரசு. இப்போது அந்த விஜிலென்ஸ் ஆணையத்தின்கீழ் இயங்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் டிஜிபியையும் மாற்றியுள்ளது. இதிலிருந்து, குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் மூடுவிழா நடத்துகிறது அதிமுக அரசு என்பது தெளிவாகியுள்ளது என்றார்.

ஏற்கெனவே குட்காவில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கோப்பையே காணவில்லை என்றார்கள். அப்படி காணாமல்போன கோப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதில் இருந்தே, கோப்பு காணவில்லை என்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்டது என்று புலப்படுகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் குட்கா வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால் அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஜிலென்ஸ் ஆணையமோ, லஞ்ச ஒழிப்புத் தடுப்பு துறையோ குட்கா ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மீதோ, காவல்துறை டிஜிபிக்கள் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குட்கா வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, குட்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை மறைக்கும் அதிமுக அரசும், அதற்கு துணைபோகும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த சமயத்தில் இதுபோன்ற டிரான்ஸ்பர்களுக்கு துணைபோகும் உயரதிகாரிகளும் விசாரணை வளையத்தில் இருந்து நிச்சயம் தப்பமுடியாது என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios