இனி எப்போதும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு துணையாக இருக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டு மேடையிலேயே வைகோ கண்கலங்கினார். 

மதிமுக சார்பில் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் கலைஞர் குறித்த புத்தக வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய வைகோ, தமிழகத்தை சூழ்ந்துள்ள அபாயத்தை முறியடிக்க, மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றார். தன்னிடம் இல்லாத ஆற்றலும், திறமையும் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது என்றும் வைகோ தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து உரையாற்றிய மு.க.ஸ்டாலின், வயது முதிர்ந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த தலைவரை வைகோ சந்தித்தார். கலைஞரின் கையை அழுது கொண்ட பிடித்து வைகோ தடுமாறினார். கலைஞரும், வைகோ கையை பிடித்துக்கொண்டார். அப்போது கலைஞரிடம் அண்ணா உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அதேபோல ஸ்டாலினுக்கும் என் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பேன்' என்று கூறியதை நினைவு கூர்ந்தார். இனி வைகோவுக்கு எப்போதும் தாம் துணையாக இருப்பேன் என மு.க.ஸ்டாலின் கூறியபோது, மேடையில் அமர்ந்திருந்த வைகோ நெகிழ்ந்து கண்கலங்கினார். 

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு என பல போராட்டங்களை வைகோ முன்னின்று நடத்தி வருகிறார். பொடாவில் வைகோ வேலூர் சிறையில் இருந்த போது கூட்டணி பேச சந்தித்தேன். இப்போதும் சீக்கிரம் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறேன். கலைஞர் சொன்னதை நாங்கள்கூட மீறியிருக்கிறோம்.

ஆனால் வைகோ எப்போதுமே மீறியது கிடையாத என்றார். வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் 40 தொகுதியிலும் பிரச்சாரம் செய்வதற்காக வைகோ தயாராகி விட்டார். கலைஞர் வைகோவை போர்வாள் என்ற அழைத்ததையும், தொண்டர்கள் தம்மை தளபதி என்று அழைப்பதையும் சுட்டிக்காட்டி, தற்போது தளபதியும், போர்வாளும் ஒரேமேடையில் இருப்பதாகக் குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.