தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. அரசின் தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.

பின்னர் இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். கஜா புயல் பாதித்த நேரத்தில், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் செயல் ஏற்புடையது அல்ல. மேலும் கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார். 

கஜா புயல் பாதிப்பால் பல லட்சம் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஸ்டாலின் கூறினார். ஆனால் கஜா புயல் குறித்து பேச ஸ்டாலின் கேட்ட அனுமதிக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். ஆகையால் மேகதாது தொடர்பாக பேசிய ஸ்டாலின் இந்த சூழலில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது. 

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என கூறியுள்ளார். காவிரி நீரை கர்நாடக அரசு தேக்கி வைத்துக் கொள்ளக்கூடாது என நடுவர் மன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது தன்னிச்சையானது. மேகதாது தடுப்பணை கட்ட தமிழக அரசு தடை உத்தரவு பெற்றிருக்க வேண்டும். 

தமிழகத்தின் உரிமைகளை பிரதமர் மதிக்கவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று ஏன் பிரதமரை சந்திக்கவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை, இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்படுகிறது என்றார்.