கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகிய யாராலும் இந்த மண்டலத்துக்கு என்ன பயன் என்று பார்த்தால், எதுவும் இல்லை என திமுக தலைவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 திருப்பூரில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்;- தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற மாவட்டமாகத் திருப்பூர் மாவட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுக்காலமாக, அதிலும் குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டு காலமாகப் பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனங்களாக இருந்தாலும் அவை செயல்பட முடியாமல் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் தான் முழுமுதற் காரணம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தொழில் வளர்ச்சியில், பின்னலாடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதற்கு இவர்கள் தானே காரணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்கிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் சேர்ந்து இந்த பத்தாண்டுக் காலத்தில் எத்தனையோ திட்டங்களை இந்த மண்டலத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்தார்களா?

இந்த மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாகச் சம்பாதிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, மக்கள் பணிகளைச் செய்யவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும். பினாமி கம்பெனிகளைத் தொடங்கி உள்ளாட்சித் துறை டெண்டர்கள் அனைத்தையும் சூறையாடி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி ஊழல், எல்.ஈ.டி. பல்பு ஊழல், குப்பை அள்ளும் வண்டி கொள்முதலில் ஊழல், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் ஊழல், வேலை நியமன ஊழல், எம்- சாண்ட் பயன்படுத்துவதில் ஊழல் என்று வண்டி வண்டியாக ஊழல் செய்தவர் தான் அமைச்சர் வேலுமணி!

பணம் சம்பாதிப்பதற்காக, பில் போட்டு பணத்தை எடுப்பதற்காக சில திட்டங்களைச் செயல்படுத்துவதாக நாடகம் ஆடுகிறார்களே தவிர மக்களுக்குச் செய்யவேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எந்தப் பணியையும் செய்யவில்லை! உள்ளாட்சித் துறையில் 349 டெண்டர்கள் மூலமாக நடைபெற்ற ஊழல்கள் குறித்து தி.மு.க.வும் அறப்போர் இயக்கமும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்தது. அவர்கள் அதனை விசாரிக்கவே இல்லை. உயர்நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு போனோம். உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் மனு அனுப்பவில்லை அமைச்சர் வேலுமணி. பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கலாமா என்று நீதிமன்றம் எச்சரித்தது. லஞ்ச ஒழிப்புத் துறையையும் நீதிமன்றம் கண்டித்தது. இப்படி நீதிமன்றத்தை மதிக்காத, நீதிமன்றத்தால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட அமைச்சர்தான் அமைச்சர் வேலுமணி.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நேரடியாக கொள்ளையடிக்க முடியாது என்பதற்காக அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் வைத்திருந்தார். நீதிமன்றம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டது. பல முறை உத்தரவுகளைப் போட்டுக் கண்டித்தது. வேறு வழியில்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். அதுவும் முழுமையாக நடத்தவில்லை. அரைகுறையாக நடத்தினார்கள். கிராமப் பகுதிகளுக்கு நடத்தினார்களே தவிர, நகராட்சிக்கு நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை? நகராட்சியில்தான் அதிகமாகக் கொள்ளையடிக்க முடியும் என்பதால் நடத்தவில்லை. கிராமப் பகுதியில் பெரும்பாலும் தி.மு.க.வினர் வெற்றி பெற்று வந்துவிட்டார்கள். அதுவும் அவர்களுக்குப் பெரிய பின்னடைவு ஆகிவிட்டது. இப்படி நகர்ப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தை வைத்துப் பல ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார் அமைச்சர் வேலுமணி. இவர் மீதான ஊழல் புகார்களை மட்டும் தனியாக விசாரிக்கத் தனி நீதிமன்றமே அமைக்க வேண்டும். அந்தளவுக்கு மலையளவு குற்றச்சாட்டுகள் வேலுமணி மீது குவிந்துள்ளன. உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல் தன்னை சூப்பர் முதலமைச்சரைப் போல நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருபவர் ஊழல்மணியான அமைச்சர் வேலுமணி.

கொள்ளை, இலஞ்சம், முறைகேடுகள் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் தன்னை அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல்கள் செய்வதிலும் கைதேர்ந்தவராக இருப்பவர் அமைச்சர் வேலுமணி. தன்னை எதிர்த்து எழுதிய காரணத்தால் பத்திரிகையாளர்களைக் கைது செய்து கோவையில் சிறையில் அடைத்தார் அமைச்சர் வேலுமணி. கொரோனா காலத்திலும் தனது கொள்ளைகளை நிறுத்தாமல் தொடரும் வேலுமணியின் வேலைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாவட்டச் செயல்வீரர்கள் தொடர்ந்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். இதற்கு முறையாகப் பதில் சொல்ல வக்கற்ற வேலுமணி, தனது கையில் அதிகாரம் இருப்பதால் தி.மு.க.வினரைக் கைது செய்து சிறைச்சாலைகளைத் தனது சதிவலைக்குப் பயன்படுத்தி வருகிறார்.

இதேபோல் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், மின் வாரியத்துக்கு உதிரிப்பாகங்கள் வாங்குவதில் ஊழல் என்று பல்வேறு புகார்கள் குவிந்துள்ளது. இதை எல்லாம் மறைப்பதற்காக தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டது என்று கதைவிட்டுக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் தங்கமணி. ஒரு மாநிலம் தனது தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதோடு, தனியாருக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மின்சாரத்தை விற்பனை செய்தாலோதான் அந்த மாநிலத்துக்கு மின்மிகை மாநிலம் என்று அர்த்தம். அப்போதுதான் மின் மிகை மாநிலம் என்று சொல்ல முடியும். ஆனால் தனியாரிடம் இருந்து 3580 மெகாவாட் மின்சாரத்தை கடன் வாங்குகிறது தமிழக அரசு. எதற்காக வாங்குகிறார்கள். அரசு மூலமாகத் தயாரிக்கும் முயற்சிகளை எதனால் எடுக்கவில்லை? தனியாரிடம் வாங்கினால் தான் கமிஷன் கிடைக்கும். அதற்காகத்தான் வாங்குகிறார்கள்.

மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவர் அமைச்சர்தானா? அல்லது அமைச்சர் மாதிரியா என்பது தெரியவில்லை! முதலமைச்சருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்படாது என்று அமைச்சர் அறிவிப்பார். அடுத்த நாளே திறக்கப்படும் என்று முதலமைச்சர் சொல்வார். பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகாது என்பார் அமைச்சர். அடுத்த நாளே ரத்து செய்வார் முதல்வர். பள்ளிக் கல்வித்துறையில் அதிகாரிகள் அறிவிப்பதும் அமைச்சருக்குத் தெரியவில்லை. அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதற்கு மாறாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஐயோ பாவம்! செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படியா பழிவாங்குவது?

இந்த மண்டலத்தில் இன்னொரு அமைச்சர் இருக்கிறார் அவர் தான் உடுமலை ராதாகிருஷ்ணன். அவர் என்ன நிலைமையில் இருந்தவர், இப்போது என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது அவரது கட்சிக்காரர்களுக்கே தெரியும்.

இன்னொரு அமைச்சர் கருப்பண்ணன். திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் வருவதைப் பற்றிக் கேள்வி கேட்டால், 'கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் நொய்யல் ஆற்றில் நுரையாக இருக்கிறது' என்று கண்டுபிடித்த விஞ்ஞானி அவர். மதுரையில் ஒரு தெர்மகோல் விஞ்ஞானி இருக்கிறார் என்றால், இந்த மண்டலத்தில் ஒரு சோப்பு விஞ்ஞானி இருக்கிறார் அவர் தான் கருப்பண்ணன். இப்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, இந்த மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகிய யாராலும் இந்த மண்டலத்துக்கு என்ன பயன் என்று பார்த்தால், எதுவும் இல்லை!

தங்கள் பதவியைப் பயன்படுத்தி தங்கள் குடும்பத்துக்கு, உறவினர்களுக்கு, பினாமிகளுக்கு சொத்துச் சேர்த்துக் கொடுத்தார்கள் என்பதைத் தவிர எந்த நன்மையையும் இந்த மண்டலத்துக்கு செய்யவில்லை! உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக ஆக்கியது தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஜி.வெங்கட் ராமன் அவர்கள். நான்கு வழிச்சாலையாக மாற்றினார் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு. ஆனால் பத்து ஆண்டுகளாக நெடுஞ்சாலையைக் கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, எவலநாசூர் பேட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டனம் போன்ற இடங்களில் இருவழிச்சாலைகளாக மாற்றக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏதாவது செய்தாரா? இல்லை!

கொச்சி துறைமுகம் முதல் கடலூர் துறைமுகம் வரையிலான இணைப்புச் சாலை இது. இந்த எட்டு இடங்களில் எத்தனையோ முறை விபத்துகள் ஏற்படுகிறது. அதற்கு ஏதாவது தீர்வு கண்டாரா பழனிசாமி? இல்லை! எட்டுவழிப்பசுமைச் சாலையைத் தனது தனிப்பட்ட லாபத்துக்காக நிறைவேற்றத் துடிக்கும் பழனிசாமி, மக்கள் பயன்பாட்டுக்கான இந்தச் சாலைகளைப் பராமரித்தாரா? இப்படி இந்தப் பணியையும் செய்யாத அ.தி.மு.க. அரசாங்கம், இந்த மண்டலத்துக்குச் செய்த கெடுதல்கள்தான் அதிகம் என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.