Asianet News Tamil

இரக்கமற்ற முதல்வரை பெற்றிருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.. எடப்பாடியாரை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்..!

ஜனநாயகம் மிக வலிமையானது; இதற்கு தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை! கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றில் கூட தன்னை மட்டுமே முன்னிறுத்தி, அதிமுக என்ற கட்சியை முன்னிறுத்தி, தமிழக அரசு என்ற மக்களுக்கான நடுநிலை அமைப்பை அரசியல்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

mk stalin slams edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Apr 15, 2020, 3:49 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp
முதல்வர் பழனிசாமி விளம்பர மோகத்திலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என மு..ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, அனைவருடைய வாழ்வும் செய்வதறியாது ஸ்தம்பித்து நிற்கின்ற நெருக்கடி மிகுந்த நிலையிலே கூட, அதிமுக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேரிடரை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, நாகரிக சமுதாயம் சிறிதும் ஏற்கவியலாதவாறு, அரசியல் செய்து வருவது கண்டு, நடுநிலையாளர்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.


ஊரடங்கு உத்தரவு, ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு மட்டுமே விதிவிலக்கு, மற்றவர்களுக்கு எல்லாம் கட்டாயம் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஒரு முதல்வர் மிகுந்த பாரபட்ச அணுகுமுறையுடன் செயல்படுவது, ஜனநாயகத்திற்கே கேடாய் அமைந்திருக்கிறது. பொதுமக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்ற அடிப்படை ஒற்றுமை எண்ணமே இல்லாத இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட முதல்வரை தமிழகம் பெற்றிருப்பது ஒரு கெட்ட வாய்ப்பாகும்.

பிரதமரின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் சுய ஊரடங்கு மார்ச் 22-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு, அடுத்து 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகும், திமுக சார்பில் எவ்வளவோ வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டப்பேரவை நடத்திக் கொண்டிருந்தது முதல்வர் பழனிசாமிதான். பெற்றோர், மாணவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே, 8.35 லட்சம் மாணவர்களை 24.3.2020 அன்று பிளஸ் 2 தேர்வு எழுத வைத்ததும் அவர்தான்! அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று திமுக சார்பில் மார்ச் 28-ம் தேதியே கோரிக்கை விடுத்தும், அதை ஏற்க மறுத்த முதல்வர், ஊரடங்கு நேரத்தில் தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், சுகாதாரத் துறைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று 31.3.2020 அன்று ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதே தேதியில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளுடன் அமர்ந்து, தலைமைச் செயலாளரே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.


அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் என்று, திமுகவின் கோரிக்கைக்கு சுயநல நோக்குடன் பதில் சொன்ன முதல்வர், 3.4.2020 அன்று தலைமைச் செயலாளர் மூலம் அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுடன் அமர்ந்து 10.4.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர் இதே முதல்வர்தான். அமைச்சர்கள், அதிகாரிகள் என்று 40க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமரவைத்து, 11.4.2020 அன்று அமைச்சரவைக் கூட்டத்தையே முதல்வர் நடத்தியிருக்கிறார். இத்தனைக் கூட்டங்களையும் நடத்தியபோது முதல்வருக்கு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு தெரியவில்லை.

ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால், யாருக்காவது நோய்த் தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும் என்பது தெரியவில்லை; மத்திய - மாநில அரசுகளின் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை உணரவில்லை. ஆனால், திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்ததும், மேற்கண்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, சென்னை மாநகரக் காவல்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்து, அப்பட்டமான, அசிங்கமான, அநாகரிகமான அரசியலைச் செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.


இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவுடன் "கூட்டத்தில் 11 தலைவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை. தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் கூட்ட அரங்கில் கடைப்பிடிக்கப்படும். அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றெல்லாம் திமுக உறுதியளித்தும், 'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்ற பிடிவாத மனப்பான்மையில், கொரோனா நோய்த் தடுப்பு குறித்த திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தடை செய்தது கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை என்று எவரும் ஏற்கமாட்டர்; அதிமுக என்ற கட்சியின் அரசியல் ரீதியான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனநாயகம் மிக வலிமையானது; இதற்கு தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை! கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றில் கூட தன்னை மட்டுமே முன்னிறுத்தி, அதிமுக என்ற கட்சியை முன்னிறுத்தி, தமிழக அரசு என்ற மக்களுக்கான நடுநிலை அமைப்பை அரசியல்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1 கோடி ரூபாயை தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தடுப்பது, பாதிக்கப்பட்டோருக்கு திமுக வழங்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகளைத் தடை செய்வது எல்லாமே, ஊரடங்கு நேரத்தில் திமுக ஆற்றி வரும், பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் மக்கள் பணியை எப்படியாவது தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. சீர்கெட்ட அந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

பேரிடரிலும், பொருளாதார இழப்பிலும் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் திமுக, மக்கள் நலன் சார்ந்த பணிகளிலும், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதிலும் மட்டுமே முனைப்பு காட்ட வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் திசைதிருப்பும், பின்னடைவான எவ்வித காரியத்திலும் அதிமுகவைப் போல இறங்கிவிடக்கூடாது என்றும், முடிவு செய்திருக்கிறது. எனவேதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கில், நாளைய தினம் காணொலிக் காட்சி மூலம், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். முதல்வர் பழனிசாமி விளம்பர மோகத்திலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.


அடக்குமுறைகளையும், ஆணவங்களையும் எதிர்கொண்டு, நேருக்கு நேர் சந்தித்து, அவற்றை புறமுதுகிட்டு ஓடவிட்டு, வெற்றி கண்ட இயக்கம், இந்த மாபெரும் மக்கள் இயக்கமான திமுக! ஆகவே, திமுகவின் மாவட்டக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் அனைவரும் கரோனா நோயின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை, இதுவரை செய்ததைப் போலவே தொடர்ந்து ஆங்காங்கே செய்திட வேண்டும்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Follow Us:
Download App:
  • android
  • ios