அ.தி.மு.க.வின் ஆட்சியை எப்பாடுபட்டாவது கவிழ்த்தியே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார் ஸ்டாலின். ஆனாலும் கையை மீறி ஆட்சி வண்டி அட்டகாசமாய் ஓடிக் கொண்டிருப்பதில் மனிதருக்கு ஏக எரிச்சல்தான். 

இந்நிலையில் எங்கே மைக் கிடைத்தாலும் அரசுக்கு எதிராக கண்கள் சிவக்க குதிக்கிறார், கொந்தளிக்கிறார் ஸ்டாலின். அந்த வகையில் சமீபத்தில் சேலத்தில் நடந்த ஆதித்தமிழர் மாநாட்டில் கலந்து  கொண்ட ஸ்டாலின் மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆவேசமாக வறுத்தெடுத்தார். அப்போது ஒரு கட்டத்தில்...“குட்டிக்கர்ணம் அடித்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் எந்த வாய்ப்பும் கிடைக்காது. எடப்பாடி அரசு ஒரு கூலிப்படை அரசு. கொலை, கொள்ளைக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்று போர்டுதான் வைக்கலை, மற்றபடி எல்லாமே நடக்குது.” என்று ஆசிட் வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டார்.

 

மேடையிலிருந்த சுப.வீரபாண்டியன், நேரு, வேலு உள்ளிட்டோரே அதிர்ந்துவிட்டனர். அவர்கள் நினைத்தது போலவே அரசின் மீதான ஸ்டாலினின் இந்த விமர்சனம் இதோ பஞ்சாயத்து ஆக துவங்கியிருக்கிறது. உளவுத்துறையிடம் இந்த பேச்சின் வீடியோவை வாங்கியிருக்கும் அரசு, ஸ்டாலினின் மீது மிக கடுமையான ‘அவதூறு வழக்கு’ ஒன்றை பதிவு செய்ய இருக்கிறது என தகவல். அதுவும் வெகு சாதாரணமாக இல்லாமல், கைது வரை கொண்டு செல்லலாம், அல்லது முன் ஜாமீனுக்கு அவரை அலைய விடும் வகையில் வழக்கை வடிவமைக்கலாம் என்று யோசித்துள்ளார்கள்.

 

அதேவேளையில் ஸ்டாலினின் இந்த வார்த்தைகளை அரசியல் பார்வையாளர்களும் கண்டித்துள்ளனர். ‘கொடநாடு விவகாரத்தில் முதல்வரின் தலை உருட்டப்படுவதை அடிப்படையாக வைத்து ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி எனும் தனி நபரை மையமாக வைத்து அவர் பேசியிருந்தால் கூட பரவாயில்லை. 

ஆனால், இந்த அரசாங்கத்தையே கூலிப்படை அரசாங்கம் என்று சொன்னது வரம்பு மீறிய விமர்சனம். எதிர்கட்சி தலைவர் எனும் முறையில் ஸ்டாலினும் இந்த அரசின் ஒரு முக்கிய அங்கமே. அப்படிப்பட்டவரே இந்த அரசை மூர்க்கத்தனமாக விமர்சித்திருப்பது மாநிலத்தின் பெயரையே தேசிய வெளியில் கெடுப்பது ஆகும். மாநிலத்தின் இறையாண்மையையே மானபங்கம் செய்த செயல். ஸ்டாலின் இதை தவிர்த்திருக்க வேண்டும். ” என்கிறார்கள். வழக்குக்கு அரசாங்கம் தயாராகி வருவது ஸ்டாலினின் கவனத்துக்கும் போக, அவரும் அதை எதிர்கொள்ள தன் சட்ட நிபுணர்களை அலர்ட் செய்துவிட்டதாக தகவல். இதுதானா தளபதி உங்க டக்கு?!