பசும்பொன்னில் தேவர் குருபூஜையின்போது தேவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டபோது அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை பூசாமல் கழுத்தில் தேய்த்துக்கொண்டு கீழே கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைக் கண்டித்து தேவரின அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்க மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுகுறித்து தென்னாட்டு மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தேவர் திருமகனாரின் 133 வது ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன் ஆலயத்திற்கு வருகை தந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேவர் திருமகனார் ஆலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டி, தேவர் திருமகனாரையும், ஒட்டுமொத்த தேவர் இன மக்களையும் அவமரியாதை செய்துள்ளார். தேவர் திருமகனார் ஆலயத்திற்கு ஆன்மீக நோக்கத்துடன் வராமல் அரசியல் சுயநலத்திற்காகவும், தேவரின மக்கள் ஓட்டுக்களை பெறுவதற்காகவும் பசும்பொன்னுக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டிக்கிறோம். 

தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த ஆன்மீகச் செம்மல் தேவரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட  மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவோம் என்று பகல் கனவு காண்கிறார். அவரின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. பசும்பொன்னில் தவறாக நடந்துகொண்ட ஸ்டாலினை கண்டித்து தேவரின் அமைப்புகளை ஒன்று திரட்டி, ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம்’’ என தென்னாட்டு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கணேசத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோல தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டு கழகம் மு.க.ஸ்டாலினை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’’எங்கள் இன மக்களின் தெய்வமாக கருதக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தெய்வ திருமகனார் தேவரின் விபூதியை பூசாமல் கீழே கொட்டி தீர்த்த செயல் தேவர் இன மக்களையும், பசும்பொன் தேவரை இழிவு படுத்தும் செயலாகும். எங்கள் குலதெய்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் விபூதியை பூசாமல் கீழே கொட்டி மெத்தனம் காட்டிய எதிர்கட்சித் தலைவரின் திமுகவிற்கு சமுதாயத்தின் ஓட்டு, ஒட்டு மொத்தமும் கிடைக்காது எனக் கூறிக் கொள்கிறோம். மு.க.ஸ்டாலின் இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வருத்தம் தெரிவிக்கத் தவறினால் எங்கள் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரியப்படுத்துகிறோம்’’என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் செயலுக்கு அகில இந்திய முன்னேற்ற கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கர்ணன், ஆப்பநாட்டு அறக்கட்டளை நிர்வாகி கோபால் பாண்டியன் உள்ளிட்டோரும்  கண்டணம் தெரிவித்துள்ளனர்.