பொங்கலன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, குளிர்காய நினைத்த எடப்பாடி அரசின் அதிகார அநியாயத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்ததும் பூசி மெழுகினர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தேர்வினை எந்தவொரு பயமின்றி எழுதுவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். 3-வது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை, வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றும் உரையை கண்டுகளிக்க அன்றைய தினம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. 

இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிகையும் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயமில்லை என்று அரசு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பிரதமர் பேசுவதாக கூறி பொங்கலன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, குளிர்காய நினைத்த எடப்பாடி அரசின் அதிகார அநியாயத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்ததும் பூசி மெழுகினர். இதோ 20-ம் தேதி பேசப்போகிறார் பிரதமர்! அவரை மகிழ்விக்க, பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.