Asianet News Tamil

பொடிபடும் மு.க.ஸ்டாலின் யுக்தி... கள யதார்த்தத்தை உணருமா திமுக..? உற்சாகமிழந்த உடன்பிறப்புகள்..!

7 தமிழர்கள் விடுதலையை முன் வைத்து அரசியல் லாபம் ஈட்டலாம் என்ற ஸ்டாலினின் திட்டமும் பணால் ஆகி விட்டது. 

MK Stalin's tactic to be crushed ... Does DMK realize the reality of the field ..?
Author
Tamil Nadu, First Published Feb 4, 2021, 3:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், திமுக அளித்த போலியான வாக்குறுதிகளே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பதை அரசியல் பார்வையாளர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த முறை அப்படி ஆகிவிடக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் உஷார் நடவடிக்கைகளால் திமுக வட்டாரம் ஆடிப்போய் கிடப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது.

 

இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள்,’’திமுக மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை, அதேபோன்று மத்தியிலும் கடந்த காலங்களைப் போன்று ஆளும் கூட்டணியில் அங்கம் வைக்கவில்லை. இருப்பினும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது சாத்தியமில்லாத பல வாக்குறுதிகளை அந்தக் கட்சி அள்ளி வீசியது. மக்கள் மத்தியில் ஒருவித மயக்கம் ஏற்பட்டது. இதனால், அத்தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது’’ எனக் கூறுகின்றனர். 

அதிமுகவினரின் இந்த கூற்று உண்மைதான் என ஒப்புக்கொள்ளும் தமிழக அரசியல் நோக்கர்கள், இதனை தற்போது தமிழக வாக்காளர்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்கிறார்கள். இருப்பினும் இன்னும் மு.க.ஸ்டாலின் கள எதார்த்தை உணரவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அதே உத்தியைப் பின்பற்றி வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார். இதன் காரணமாகவே தனது தேர்தல் பிரசார கூட்டங்களில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். ஆனால், தமிழக மக்கள் இந்த முறை ஏமாறத் தயாராக இல்லை. அவருக்கு கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் யாராவது உண்மை நிலவரத்தை விளக்குவது நல்லது’’எனக் கூறுகிறார்கள் திமுக எதார்த்தவாதிகள்.  

இதனிடையே, இந்த முறை ஸ்டாலினின் போலி வாக்குறுதி உத்தியை தேர்தலுக்கு முன்னதாகவே அடித்து நொறுக்கி விட வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என உற்சாகம் மேலிட பேசுகிறார்கள் அதிமுகவினர். ‘’நீட் தேர்வை முன் வைத்து மாணவ சமுதாயத்தின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று திட்டம் தீட்டியிருந்தார் ஸ்டாலின். ஆனால், நீட் தேர்வுக்கு யார் காரணம் என்ற உண்மையை நாங்கள் அம்பலப்படுத்தி விட்டோம். கூடவே கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், ஆல் பாஸ் அறிவிப்பை வெளியிட்டு அவர்களை திக்குமுக்காட செய்தார். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வசதியாக தினசரி 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க உத்தரவிட்டார். அதே போன்று புயல், மழையால் பாதிக்கப்பட்ட 11 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 1,117 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் குறித்த முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு ஊழியர்களை தங்கள் பக்கம் வளைத்து விடலாம் என்ற திமுக திட்டத்திலும் மண் விழுந்து விட்டது. கொரோனா காலத்திலும் அவர்களுக்கான சம்பளத்தைக் குறைக்காதது, தீபாவளி, பொங்கலுக்கு போனஸ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து போன்றவை தேர்தலுக்கு முன்னதாகவே அவர்களை அதிமுகவுக்கு ஆதரவாக மாற்றி விட்டன. 7 தமிழர்கள் விடுதலையை முன் வைத்து அரசியல் லாபம் ஈட்டலாம் என்ற ஸ்டாலினின் திட்டமும் பணால் ஆகி விட்டது. அண்மையில் இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி, கவர்னரை சந்தித்து கொடுத்த அழுத்தம் காரணமாக விடுதலை குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம்’’என எடப்பாடியின் உஷார் வியூகங்களை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios