வெள்ளத்தில் மிதக்கும் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி.. உதவிக்காக முதல்வரை எதிர்பார்க்கும் தொகுதிவாசிகள்..!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரும் வெள்ளத்துக்குத் தப்பவில்லை. இத்தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சென்னையில் பெய்த பெரு மழையால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூர் வெள்ளத்தில் மிதக்கிறது.
சென்னையில் மழை என்றாலே தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நினைப்பது மக்களின் எண்ணம். ஆனால், வடசென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளும் மழையில் பாதிக்கப்படுவது வாடிக்கைதான். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் விடாமல் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 25 செ.மீ.க்கு மேல் மழை கொட்டியதால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.
இதன் காரணமாக, வட சென்னையில் உள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை, ஸ்டீபன்சன் சாலை, பேரக்ஸ் சாலை, குக்ஸ் சாலை, ஓட்டேரி, தண்டையார்பேட்டையில் என ஏராளமான சாலைகளில் இடுப்பளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை அகற்றவும் போக்குவரத்தைச் சீர் செய்யவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பத்தூர் ராஜீவ் நகர், திருமலைப்பிரியா நகர், பானு நகர், மேனாம்பேடு, தாங்கல் ஏரி, பட்டரைவாக்கம் பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரும் வெள்ளத்துக்குத் தப்பவில்லை. இத்தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் கழிவுநீரும் மழை நீரும் சேர்ந்து வீடுக்குள் புகுந்துவிட்டது. இந்நிலையில் கொளத்தூரில் உள்ள கே.எஸ். நகரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் காணொலி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார். “சென்னை மழை காரணமாக கழிவுநீருடன் மழை நீர் கலந்து தேங்கு நிற்கிறது. இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தெருக்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கினார்.